உலகம்

முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா கமேனிக்கு இறுதிச்சடங்கு-தயாராகும் ஈரான்?

மொஹ்சென் மஹ்மூதியை மேற்கோள் காட்டி அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஈரான் நடத்திய போரின் காரணமாக நீண்டகாலம் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்ட உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கான "பிரமாண்டமான" இறுதிச் சடங்கிற்கான ஆரம்பகட்டப் பணிகளை ஈரான் அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக அதிகாரப்பூர்வ ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

நேரம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், "இறுதிச் சடங்குக்கு தயாராவதற்காக ஒரு சிறப்பு தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு முகமைகள் தற்போது திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றன" என்று, இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கான தெஹ்ரான் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் மொஹ்சென் மஹ்மூதியை மேற்கோள் காட்டி அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இஸ்லாமியக் குடியரசை வழிநடத்திய கமேனி, பிப்ரவரி 28 அன்று போரைத் தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களின் முதல் அலையில் கொல்லப்பட்டார். அவருடைய மகனும் அவருக்குப் பின் வந்தவருமான மொஜ்தபா கமெனியும் இந்தத் தாக்குதல்களில் காயமடைந்தார். மேலும், அவர் பதவியேற்றதில் இருந்து பொதுவெளியில் காணப்படவில்லை.

மூத்த கமெனிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஒன்று ஏப்ரல் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டது, ஆனால் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்த அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கை, போர் காரணமாக நடத்த முடியவில்லை.

"அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன், ஒரு 'பிரமாண்டமான' விழாவை நடத்துவதற்கு தேவையான நிலைமைகளை ஏற்படுத்துவதற்காக பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன" என்றும், "பரவலான பங்கேற்பு" எதிர்பார்க்கப்படுவதாகவும் மஹ்மூதியை மேற்கோள் காட்டி அரசு தொலைக்காட்சி கூறியது.

ஏப்ரல் மாதம் முதல் போர் நிறுத்தம் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தபோதிலும், மோதலைத் திட்டவட்டமாக முடிவுக்கு கொண்டுவரும் ஒரு உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது.