மத்திய கிழக்கில் நடந்து வரும் போரில் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்தி வருகிறது. உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதம் நடைபெறும் ஹோர்முஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்த ஜலசந்தியை கடந்து செல்ல அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் தடை விதித்து உள்ளது. அதேவேளையில் இந்தியா உள்பட தனது 5 நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்து செல்லலாம் என்று ஈரான் தெரிவித்தது.
இதற்கிடையே ஹோர்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து செல்ல கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு செய்தது.
அதன்படி, ஹோர்முஸ் ஜலசந்தியை ஒரு கப்பல் கடப்பதற்கு சுமார் 2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.18 கோடி) வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஹோர்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் விதிக்கும் திட்டத்திற்கு ஈரான் பாராளுமன்றப் பாதுகாப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தில் ஹோர்முஸ் ஜலசந்திக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், கப்பல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிதி ஏற்பாடுகள் மற்றும் ரியால் அடிப்படையிலான சுங்கக் கட்டண முறையைச் செயல்படுத்துதல் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையே அமெரிக்க கருவூலத்துறை தலைவர் ஸ்காட் பெசென்ட் கூறும் போது, ஹோர்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை மீண்டும் அமெரிக்கா கைப்பற்றப் போகிறது என்றார்.