ஹார்முஸ் ஜலசந்தி
உலகம்

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: அமெரிக்காவுக்கு ஈரான் புதிய நிபந்தனை..!

அமெரிக்கா இனி ஒருபோதும் தங்களை அச்சுறுத்தக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது.

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் போர் முடிவுக்கான ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாமல் உள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை வணிக கப்பல்கள் எளிதாக கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது தொடர்பாகத்தான் தற்போது சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஈரான் புதிய நிபந்தனையை விதித்துள்ளது.

ஈரான் புதிய நிபந்தனை

ஈரானின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான உச்ச தேசிய பாதுகாப்பு மன்றம் அமெரிக்கா தனது நடத்தையைச் சரிசெய்து கொள்ளும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது என்று அறிவித்துள்ளது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தி அதன் வழித்தடப் போக்குவரத்தையும் நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை உலுக்கக்கூடிய வகையிலான புதிய நிபந்தனைகளையும் அது முன்வைத்துள்ளது.

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றம் முன்வைத்துள்ள நிபந்தனைகள் பின்வருமாறு:-

அமெரிக்கா இனி ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தக்கூடாது. ஈரானுடனும் அப்பிராந்தியத்தில் உள்ள அதன் ஆயுதமேந்திய கூட்டாளிகளுடனும் நடத்தி வரும் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா நீக்க வேண்டும். அத்துடன் அப்பகுதியிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும். போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரானுக்கு முழுமையான இழப்பீடு" வழங்க வேண்டும். பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களை எந்த நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

இதற்கு அமெரிக்கா தரப்பில் உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர டிரம்பிற்கு, அமெரிக்க தளபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அபுதாபி கப்பல் மீது தாக்குதல்

அமெரிக்கா- ஈரான் இடையிலான போருக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற கப்பல் மீது ஈரான் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றம்சாட்டியுள்ளது.

அபுதாபியைச் சேர்ந்த ADNOC என்ற எண்ணெய் மற்றும் கியாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும், அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் தொடங்கியதில் இருந்து 12-க்கும் அதிகமாக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.