ஈரானை அமெரிக்கா முழுமையாக கண்காணித்து வருவதாகவும் தங்களது கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஈரானால் எதையும் செய்ய முடியாது என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "நாங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களது அனுமதியின்றி அவர்களால் நகரக்கூட முடியாது. கழிப்பறைக்குக் கூடச் செல்ல முடியாது" என்று கூறியுள்ளார்.
தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்தத் நாங்கள் தயார் நிலையில் உள்ளோம் என்றும், இந்தத் தற்காலிக மோதல் நீண்ட காலம் நீடிக்காது என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியின் முழுமையான கட்டுப்பாடு தற்போது அமெரிக்காவின் கைகளில் உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்து தினமும் மில்லியன் கணக்கான பேரல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு தங்களது கப்பல்கள் பாதுகாப்பாகப் புறப்படுவதாகவும், ஈரானின் டிரோன்கள் தென்பட்டால் அவை சுட்டு வீழ்த்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
ரேடார் அமைப்புகள் மற்றும் ஏவுகணைகளை மீண்டும் நிறுவுவதற்கும், கண்ணிவெடிகளைப் பதிப்பதற்குமான ஈரானின் புதிய முயற்சிகள் அனைத்தையும் தங்களது ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் தகர்த்தெறிந்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை பதிப்பதற்காக ஈரான் தயாரித்து வந்த ஒரு பெரிய ராக்கெட்டின் பணி நிறைவடையும் தருவாயில், அதைத் தங்களது படைகள் கண்டறிந்து அழித்ததாகவும் டிரம்ப் மேலும் கூறினார்.
அமெரிக்கா - ஈரான் இடையே ஹார்முஸ் மற்றும் அதனை சுற்றிய பகுதியில் பரஸ்பர தாக்குதல் நடந்து வருகிறது.
ஈரான் மீது இந்த வாரம் அமெரிக்கா நடத்திய இந்தத் தாக்குதலில் ஈரானில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 108 பேர் காயமடைந்தனர்.
ஈரான் குஹெஸ்டாக் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றின் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பதிலடியாக குவைத், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்காவின் அடித்தளத்தையே ஆட்டிப்படைக்கும் வகையிலான புதிய உத்தியை ஈரான் கையாண்டு வருவதாக ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மொஹ்சென் ரெசாய் எச்சரித்துள்ளார்.