ஈரான் ஒன்றும் கியூபா, வெனிசுலாவை போல அல்ல என்றும் அமெரிக்கா தாக்கும் வரை காத்திருக்காமல் பதிலடி கொடுப்போம் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் வெளியுறவு துறை இணை அமைச்சர் ர் காசெம் கரிபாபாடி அந்நாட்டு அரசு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், அமெரிக்காவுடனான உறவுகளில் ராஜதந்திரம், பொருளாதாரத் தடை மற்றும் ராணுவத் தாக்குதல் ஆகிய மூன்று சாத்தியமான சூழ்நிலைகளுக்கு ஈரான் தயாராகி வருவதாகக் கூறினார்.
"ஈரான் என்பது நீங்கள் (அமெரிக்கா) முற்றுகையிடக்கூடிய கியூபா அல்ல, சரணடையச் செய்யக்கூடிய வெனிசுலாவும் அல்ல" என்று கூறிய அவர் வான்வழி அல்லது தரைவழி முற்றுகைகள் மூலம் அமெரிக்கப் படைகள் இதுவரை எந்த வெற்றியையும் அடையத் தவறிவிட்டன என்றும் குறிப்பிட்டார்.
மற்றொரு தாக்குதலுக்கு களம் அமைப்பதற்காக அமெரிக்கா ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா பயன்படுத்தக்கூடும் என்று சந்தேகம் தெரிவித்த அவர் அமெரிக்கா தாக்கும் வரை ஈரான் காத்திருக்காது என எச்சரித்தார்.
ஈரான் இன்னும் போர் நிலையில்தான் உள்ளது என்றும், தற்போதைய நிலையைப் போராகவும் கருதாமல் அமைதியாகவும் கருதாமல் இருப்பதாக அவர் கூறினார்.
ஈரானின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு, போர் நிரந்தரமாக முடிவுக்கு வரும் வரை, ஈரானின் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமையை அனுமதிக்க முடியாது என கரிபாபாடி கூறினார்.
மோதலின் போது சேதமடைந்த இடங்கள் உட்பட, தனது அணுசக்தி நிலையங்களுக்கு ஆய்வாளர்களை மீண்டும் அனுமதிக்குமாறு ஈரானை ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்கா ஈரானின் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் சிதைத்துள்ளது என்று கரிபாபாடி கூறினார்.
"கடந்த ஒன்றரை ஆண்டுகளில், அமெரிக்கா தனது தீய நோக்கங்களை குறைந்தபட்சம் மூன்று முறையாவது வெளிப்படுத்தியுள்ளது.
இது, ராஜதந்திரப் பேச்சுவார்த்தை மேசையில் அமெரிக்காவை நம்ப முடியாது என்பதைக் காட்டுகிறது" என்று அவர் கூறினார்.
போர் நடவடிக்கைகளை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருதல், அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை நீக்குதல், மற்றும் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களை விடுத்தவித்தல் ஆகியவை ஈரானின் நிபந்தனைகளாக உள்ளது.