ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களை தொடங்கிய பிறகு, அந்த நாட்டில் விதிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய இணையதள முடக்கம் தற்போது ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ளது.
டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பான NetBlocks இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இது உலக வரலாற்றிலேயே மிக நீண்ட கால தேசிய அளவிலான இணைய முடக்கமாகப் பதிவாகியுள்ளது.
பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள் தீவிரமடைந்தபோது பிளாக்அவுட் தொடங்கியது. தொடர்ந்து 37 நாட்களாக (864 மணிநேரத்திற்கும் மேலாக) இந்த இணைய முடக்கம் நீடித்து வருகிறது.
இதற்கு முன்பு மியான்மர், சூடான், காஷ்மீர் போன்ற பகுதிகளில் நீண்ட காலத் தடைகள் இருந்தபோதிலும், அவை குறிப்பிட்ட பகுதிகளுக்கு உட்பட்டதாகவோ அல்லது அவ்வப்போது சீரமைக்கப்படுபவையாகவோ இருந்தன.
ஆனால், நாடு முழுவதுமாக இவ்வளவு காலம் இணைய முடக்கம் நீடிப்பது இதுவே முதல்முறை.
VPN மற்றும் செயற்கைக்கோள் இணைப்புகளையும் பயன்படுத்த முடியாதபடி அரசு முடக்கியுள்ளது.
தற்போது 'ஒயிட் லிஸ்டிங்' என்ற முறையின்படி அரசு அங்கீகரித்த நபர்கள் மற்றும் குறிப்பிட்ட முக்கியத் துறைகளுக்கு மட்டுமே இணைய வசதி வழங்கப்படுகிறது.
சாதாரண மக்கள் உலகளாவிய இணையத்தைப் பயன்படுத்த முடியாதவாறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
போர் குறித்த தகவல்கள் மக்களிடையே பரவாமல் தடுக்கவும், போராட்டங்களை ஒருங்கிணைப்பதைத் தவிர்க்கவுமே இந்த நீண்ட கால இணையத் தடையை ஈரான் அரசு கடைப்பிடித்து வருகிறது.