இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி 2 பேருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றி உள்ளது
இஸ்ரேலின் உளவு அமைப்பான 'மொசாத்' அமைப்பிற்கு நாட்டின் முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு மையங்கள் குறித்த ரகசிய தகவல்களை வழங்கியதாகக் ஒமித் பெஹ்சாத் மற்றும் பூரியா சப்வாத் ஆகிய இரண்டு ஈரானிய குடிமகன்கள் ஈரான் அரசால் நேற்று தூக்கிலிடப்பட்டனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற போரின் போதும், சமீபத்திய மோதல்களின் போதும் ஈரானிய ராணுவ முகாங்களின் வரைபடங்கள், புகைப்படங்கள் மற்றும் முக்கிய தகவல்களை இஸ்ரேலுக்கு அனுப்பி உதவியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது.
ஈரானில் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் உளவு குற்றச்சாட்டுகளின் கீழ் மரண தண்டனைகள் வழங்கப்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த நான்கு மாதங்களில் மட்டும் தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் ஈரானில் 50க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே ஈரான் மீது தீவிர ராணுவத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் இருந்தபோதிலும், பிராந்திய நட்பு நாடுகளின் வேண்டுகோள் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அந்தத் தாக்குதல்கள் ரத்து செய்யப்பட்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த அறிவிப்பை ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் உடனடியாக மறுத்துள்ளார். அமெரிக்காவுடன் எந்தவொரு நேரடிப் பேச்சுவார்த்தையிலும் ஈரான் ஈடுபடவில்லை என்றும், அண்டை நாடான 'ஓமன்' நாட்டின் வழிகாட்டலில் ஹார்முஸ் நீரிணையில் தற்காலிகப் பாதுகாப்பான கடல்வழிப் பாதையை அமைப்பது குறித்து மட்டுமே ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீங்கும் வரை இந்த நிலைமையில் மாற்றம் இருக்காது என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.