உலகம்

அமெரிக்காவுக்கு பதிலடியாக பாலகிருஷ்ணாவின் சண்டை காட்சிகளை பகிர்ந்த ஈரான் தூதரகம்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மாநாடு நடைபெற்றது.

அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொது சபை மாநாட்டில் ஈரானை அழித்துவிடுவேன் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் சண்டை காட்சிகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்து ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டம் “நம்பிக்கையை மீட்டெடுத்தல், மாற்றத்தை நிர்வகித்தல்: அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு ஐக்கிய நாடுகள் சபை” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.

193 ஐ.நா. உறுப்பு நாடுகள் கலந்துகொண்ட மாநாட்டில், ஈரான் சார்பில் அந்நாட்டு அதிபர் மசூத் பெசஷ்கியான் கலந்துகொண்டார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்

இதன் தொடக்க அமர்வில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 40 நிமிடம் உரையாற்றினார்.

அப்போது அவர், “நான் ஒரு பெரிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது. ஈரானை விட மிகச் சிறந்த ஒரு நாட்டை, மத்திய கிழக்கில் உலகிலேயே மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாக, புதிதாக உருவாக்க அனுமதிக்கும் ஒரு ஒப்பந்தம் ஈரானுடன் செய்யப்பட வேண்டுமா?"

அவர்கள் மீண்டும் மக்களையும் நாடுகளையும் கொன்று அழிப்பதற்கு ஒருபோதும் வாய்ப்பளிக்காத வகையில், இஸ்லாமியக் குடியரசை நான் விரைவாக அழிக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

ஈரான் அதிபர் மசூத்

இதையடுத்து பேசிய ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளால் நிகழ்த்தப்படும் தாக்குதலில் உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் ஈரான் மக்கள் தான் என்று கூறினார்.

மேலும் அவர், மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் பெரிய புகைப்படங்களையும், போரின் ஆரம்ப நாட்களில் கொல்லப்பட்ட 150-க்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகளின் படங்களையும் காண்பித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் ஒருபோதும் மண்டியிட மாட்டோம் என்றும், ஈரான் ஒருபோதும் மிரட்டலுக்கு அடிபணியாது என்றும் ஈரான் அதிபர் கூறினார்.

ஜிம்பாப்வேயில் உள்ள ஈரான் தூதரகம்

இந்த நிலையில் ஈரான் பாதுகாப்பற்ற நாடு அல்ல என்று கூறி, அமெரிக்காவை அச்சுறுத்தும் விதமாக ஜிம்பாப்வேயில் உள்ள ஈரான் தூதரகம் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரியின் 58 வினாடி காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளது.

அந்த காணொளியில் எதிரிகள் பாலகிருஷ்ணாவை நோக்கி துப்பாக்கிகளால் சுடுவதும், அந்த குண்டுகளை பாலகிருஷ்ணா தடுப்பதும் பதிவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதற்காக தயாராவதும், பின்னர் அவரை கண்டு எதிரிகள் அஞ்சி நடுங்குவதும் அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் அந்த பதிவில், “ஈரானை அழிப்பது பற்றி டிரம்ப் பேசுகிறார். ஆனால் ஈரான் பாதுகாப்பற்றது அல்ல என்பது அவருக்குத் தெரியும்.

நாங்கள் அவர்களிடம் பேசியதில் இருந்து, அவர்கள் சமீபகாலமாக ஹாலிவுட் படங்களுக்கு பதிலாக பாலிவுட் படங்களை பார்த்து வருகிறார்கள்,” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT