உலகம்

அதை மட்டும் அப்புறம் பாத்துக்கலாம்.. அமெரிக்காவிடம் ஈரான் போர் நிறுத்த முன்மொழிவு

இன்னும் 3 நாட்களில் அந்நாட்டின் எண்ணெய் குழாய்கள் அழுத்தத்தால் தானாகவே வெடிக்கத் தொடங்கும்.

அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் இருக்கும் நிலையில், ஈரான் ஒரு புதிய யோசனையை முன்வைத்துள்ளது.

அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மறுத்த நிலையில் 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தடைபட்டது.

இதற்கிடையே பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் மூலமாக அமெரிக்காவுக்கு ஈரான் ஒரு போர் நிறுத்த முன்மொழிவை வழங்கியுள்ளது.

அதில், தற்காலிக போர் நிறுத்தத்தை நீண்ட காலத்திற்கு நீட்டிக்க அல்லது நிரந்தரமாகப் போரை முடிக்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையை முடிக்க கோரியுள்ள ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால் அணுசக்திக்கான யுரேனியம் செறிவூட்டலை கைவிடக் கூறும் மிகவும் சிக்கலான பேச்சுவார்த்தைகளை இப்போதைக்குத் தள்ளிவைத்துவிட்டு அப்புறம் அவற்றைப் பேசிக்கொள்ளலாம்

ஈரான் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும் மற்றும் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது

அமெரிக்காவிடம் தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளன. அமெரிக்க மக்களின் நலனுக்கு உகந்த ஒப்பந்தத்தை மட்டுமே அதிபர் மேற்கொள்வார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒலிவியா வேல்ஸ் தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு முற்றுகையைத் தளர்த்தத் தயாராக இல்லை என்று அதிபர் டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஈரானால் எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியாமல் போனால், இன்னும் 3 நாட்களில் அந்நாட்டின் எண்ணெய் குழாய்கள் அழுத்தத்தால் தானாகவே வெடிக்கத் தொடங்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஆனால் தங்களின் ஒரு எண்ணெய் கிணறு வெடித்தால் வளைகுடாவில் 4 எண்ணெய் கிணறுகள் வெடிக்கும் என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.