ஈரான் துறைமுகங்களை முடக்கும் நடவடிக்கையாக ஹோர்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது.
இதில் ஈரானுக்கு செல்லும் கப்பல்களையும், அங்கிருந்து வெளியேறும் கப்பல்களையும் அமெரிக்கா தடுத்து வருகிறது. இதற்கிடையே ஈரான் கொடியுடன் டவுஸ்கா என்ற சரக்கு கப்பல் ஈரானுக்கு செல்ல முயன்றது.
அமெரிக்க கடற்படையின் எச்சரிக்கையை மீறி அக்கப்பல் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்துக்கு சென்றது. இதையடுத்து ஈரான் கப்பலை அமெரிக்க கடற்படை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தது. இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரானின் பிராந்திய கடல் எல்லைக்கு அருகே ஓமன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பலான டவுஸ்கா மீது அமெரிக்கா நடத்திய குற்றவியல் மற்றும் சட்டவிரோத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இது சர்வதேசச் சட்டம், ஐ.நா. சாசனம் மற்றும் சமீபத்திய போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் ஒரு கடற்கொள்ளைத்தனமான செயல் ஆகும். கப்பல் ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் அச்சுறுத்தப்பட்டு பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த செயலை ஐ.நா. பாதுகாப்பு சபை மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்பு ஆகியவை கண்டிக்க வேண்டும். மேலும் கப்பலையும் அதில் உள்ள வர்களையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஈரான் தனது இறையாண்மையைப் பாதுகாக்கவும் குடிமக்களைக் காக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று தெரிவித்து உள்ளது.