உலகம்

காடி ஐசன்கோட்டிற்கு பதவியேற்க அழைப்பு... சபாநாயகர் வேட்பாளராக மடன் கஹானா தேர்வு!

ஐசன்கோட் ஆட்சியமைக்க 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க, முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட்டிற்கு அந்நாட்டு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், நெசெட் சபாநாயகர் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் அமைச்சர் மடன் கஹானா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

“26வது நெசெட்டில் அரசாங்கம் அமைக்கும் காலகட்டத்தில், முக்கிய பதவிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து, மாற்றம் மற்றும் சீர்திருத்தக் கட்சிகளின் தலைவர்களான எனது கூட்டாளிகள் நஃப்தாலி பென்னட், யாயிர் கோலன், அவிக்டோர் லிபர்மேன் மற்றும் யாயிர் லாபிட் ஆகியோருடன் நான் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளேன்,” என ஐசன்கோட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த ஒப்பந்தத்தின்படி, ராய் ஃபோக்மேன் சபைக் குழுவின் தலைவராகவும், முன்னாள் அமைச்சர் அவிக்டோர் லிபர்மேன் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும், லிரான் அவிசார் பென்-ஹோரின் நிதிக் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐசன்கோட் தெரிவித்துள்ளார்.

“இந்த வாரத்தில் நடைபெறும் சபைக் குழுவின் கலந்தாய்வுகளில் குழுக்களின் அமைப்பு குறித்து விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும். மேலும், வரும் புதன்கிழமை அன்று நெசெட் முழு அவையின் ஒப்புதலுக்காக அது சமர்ப்பிக்கப்படும்.

அதுமட்டுமின்றி, சிறப்புக் குழுக்களை அமைப்பதற்கும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். அதன் விவரங்கள் பின்னர் தனியாக வெளியிடப்படும்” எனவும் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் பொதுத்தேர்தல்

சமீபத்தில் நடைபெற்று முடிந்த இஸ்ரேலின் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணியும், எதிர்க்கட்சியான ஐசன்கோட்டின் கூட்டணியும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெறவில்லை.

இதனைத்தொடர்ந்து வெற்றிப் பெற்ற கட்சிகளுடன் ஆலோசித்து ஐசன்கோட் ஆட்சியமைக்க அந்நாட்டு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐசன்கோட்டிற்கு ஆட்சியமைக்க 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், மேலும் 14 நாட்கள் வரை இந்த அவகாசம் நீட்டிக்கப்படலாம்.

ஐசன்கோட்டிற்கு ஆதரவளித்த அரபு கட்சிகள்

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளநிலையில், ஆட்சியமைக்க 61 இடங்களில் வெற்றிப்பெற வேண்டும். ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அணி 53 இடங்களை பெற்றது.

எதிர்க்கட்சியான காடி ஐசன்கோட் தலைமையிலான கட்சி 48 இடங்களை பெற்றது. மன்சூர் அப்பாஸ் தலைமையிலான ராம் அரபு கட்சி 8 இடங்களை பெற்றுள்ளது. யூசெப் ஜபாரின் தலைமையிலான அரபுத் தலைவர்களைக் கொண்ட ஜாயின்ட் லிஸ்ட் கூட்டணி 11 இடங்களை பெற்றுள்ளது.

இவ்விரு அரபு சக்திகளும் இணைந்து மொத்தம் 19 இடங்களை வைத்துள்ளன.

இந்நிலையில் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் முன்னிலையில் பெரும்பான்மை கட்சிகள் ஆதரவளிக்க உரிமை கோரப்பட்டது. அப்போது 67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காடி ஐசன்கோட் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பிரதமர் நெதன்யாகுவை 46 பேர் மட்டுமே ஆதரித்தனர்.

SCROLL FOR NEXT