கடந்த ஆண்டு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு நதிநீரை பகிரும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.
சிந்து மற்றும் அதன் கிளை நதிகளின் நீரையே விவசாயம் மற்றும் மின் உற்பத்திக்கு அதிகம் நம்பியிருந்த பாகிஸ்தான், நதி நீர் நிறுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா தண்ணீரை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
செனாப் நதியில் இரண்டு புதிய நீர்மின் திட்டங்களை உருவாக்க இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும் பாகிஸ்தான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தங்களுடன் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல் சிந்து நதியின் கிளை நதியான செனாபில் இந்தியா இரண்டு பெரிய நீர்மின் திட்டங்களை அமைப்பது சர்வதேச ஒப்பந்தங்களை மீறும் செயல் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தாஹிர் ஆண்ட்ராபி சாடியுள்ளார்.
இந்தியாவின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மட்டுமன்றி, பிராந்திய ஸ்திரத்தன்மை, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்
எல்லை கடந்த நீர்நிலைகளின் ஓட்டத்தை மாற்றியமைக்க முயலும் எந்தவொரு முயற்சியும் "போர் நடவடிக்கையாக" கருதப்படும் என்று பாகிஸ்தான் ஏற்கனவே எச்சரித்திருந்தது.
1960ஆம் ஆண்டு எட்டப்பட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக விலக முடியாது என்றும், இது தங்களின் 25 கோடி மக்களின் உணவு மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கும் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள நதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த இந்தியாவிற்கு முழு உரிமை உள்ளது. இது சர்வதேச தலையீடுக்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.