உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த 7.7 ரிக்டர் நிலநடுக்கம்: கரையோர பகுதிகள் கடும் பாதிப்பு!

நிலநடுக்கத்தின் தீவிரத்தால் பல மருத்துவமனைகள், வீடுகள், பாலங்கள் மற்றும் வணிகக் கட்டிடங்கள் பலத்த சேதமடைந்து இடிந்து விழுந்தன.

இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள புளோரெஸ் தீவுப் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் நிலப்பரப்புகள் பலமாக அதிர்ந்ததால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

நில அதிர்வு நிலவரம்

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, நிலநடுக்கத்தின் மையப்பகுதி எண்டே நகரத்திற்கு வடமேற்கே 68 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் 5.6 மற்றும் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த தொடர் அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.

சுனாமி எச்சரிக்கை

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசிய புவியியல் மற்றும் வானிலை ஆய்வு மையம் தெற்கு சுலவேசி மற்றும் கிழக்கு நுசா தெங்காரா ஆகிய கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. சில இடங்களில் கடல் அலைகள் 1 மீட்டர் உயரம் வரை உயர்ந்து சீறியதைத் தொடர்ந்து, கரையோர மக்கள் உடனடியாக உயரமான நிலப்பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். பின்னர் அலைகளின் ஆபத்து குறைந்ததால் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

உயிர்ச்சேதம்-கட்டிடங்கள் சேதம்

நிலநடுக்கத்தின் தீவிரத்தால் பல மருத்துவமனைகள், வீடுகள், பாலங்கள் மற்றும் வணிகக் கட்டிடங்கள் பலத்த சேதமடைந்து இடிந்து விழுந்தன. இதுவரை கிடைத்துள்ள முதற்கட்ட தகவல்களின்படி, கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பலர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகளும், சுமார் 2,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் கிராமவாசிகளும் உடனடியாகப் பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.