Riley Moore
உலகம்

இந்தியாவின் FCRA சட்டத்திருத்தம் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் – அமெரிக்கா குற்றச்சாட்டு!

சட்ட விதிகளை மீறுபவர்களுக்கான அதிகபட்ச சிறைத்தண்டனை 5 ஆண்டுகளில் இருந்து 1 ஆண்டாகக் குறைப்பு

இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மத அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியைக் கட்டுப்படுத்தும் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது.

இந்தச் சட்டதிருத்தத்திற்கு அமெரிக்காவின் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரைலி மூர் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்க எம்பியின் குற்றச்சாட்டு:

இந்தியாவின் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் 2026, இந்தியாவில் உள்ள தேவாலயங்களையும் கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களையும் அரசு தன்வசப்படுத்த வழிவகுக்கும் என்று அமெரிக்க மேற்கு வர்ஜீனியா மாகாணம் எம்பி Riley Moore குற்றம் சாட்டியுள்ளார்.

Riley Moore கூறியதாவது,

"நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு சில பத்தாண்டுகளில், புனித தோமையார் மலபார் கடற்கரைக்கு பயணம் செய்த காலத்திலிருந்தே கிறிஸ்தவர்கள் இந்தியாவில் இருந்து வருகின்றனர்.

ஆனால், இவ்வளவு நீண்ட கிறிஸ்தவ வரலாறு இருந்தபோதிலும், தேவாலயங்களையும் மத அறக்கட்டளைகளையும் அரசாங்கம் கையகப்படுத்த அனுமதிக்கும் வகையில், வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைத் திருத்த (FCRA) விதிகளைத் திருத்துவது குறித்து இந்திய நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது.

இது கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஒரு தெளிவான தாக்குதலாகும். இந்த மசோதா இதே வழியில் நிறைவேறினால், இந்தியாவுடனான நமது இருதரப்பு உறவில் இது ஒரு பெரும் கவலைக்குரிய விஷயமாக அமையும்" என்று கூறியுள்ளார்.

புதிய FCRA சட்டத்திருத்தம் (2026) கூறுவது என்ன?

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தியாவின் புதிய வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் 2026-ல் பல முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

அதன்படி, ஏதேனும் ஒரு தொண்டு நிறுவனத்தின் FCRA உரிமம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது அதன் காலாவதி காலம் முடிந்துவிட்டாலோ, அந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து பெற்ற நிதி மற்றும் சொத்துக்களை நிர்வகிக்க ஒரு "நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பை" உருவாக்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.

ஒருவேளை அந்தச் சொத்துக்கள் தேவாலயம், கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்களாக இருந்தால், அதன் மத அமைப்பையோ அல்லது ஆன்மீகத் தன்மையையோ மாற்றாமல் அப்படியே பராமரிக்க வேண்டும் என்றும் இந்த மசோதா குறிப்பிடுகிறது. மேலும், இந்த சட்ட விதிகளை மீறுபவர்களுக்கான அதிகபட்ச சிறைத்தண்டனை 5 ஆண்டுகளில் இருந்து 1 ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போதைய FCRA நிலவரம்:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2019 மற்றும் 2022-க்கு இடையில் நாட்டில் உள்ள 13,520 நிறுவனங்கள் வெளிநாட்டுப் பங்களிப்பைப் பெற்றுள்ளன.

ஜூலை 15, 2026 நிலவரப்படி, 14,449 செயல்பாட்டில் உள்ள FCRA சான்றிதழ்களும், 22,498 ரத்து செய்யப்பட்ட சான்றிதழ்களும், 15,212 காலாவதியான சான்றிதழ்களும் உள்ளன.