உலகம்

ஜன்னல் விளிம்பை பிடித்து தொங்கிய சிறுமி.. லாவகமாக காப்பாற்றிய இந்திய வாலிபர்- வைரல் வீடியோ

3 வயது சிறுமி எதிர்பாராதவிதமாக ஜன்னலில் இருந்து தவறி விழும் நிலைக்கு சென்றார்.

கிழக்கு லண்டனில் இல்போர்ட் ஹை ரோட்டில் உள்ள ஒரு கடையின் மேல் ஜன்னல் விளிம்பில் தொங்கிக்

கொண்டிருந்த 3 வயது சிறுமியை இந்திய வாலிபர் ஒருவரும், போலீஸ்காரரும் சேர்ந்து காப்பாற்றிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவத்தன்று அந்த கடையின் மேல் ஜன்னல் பகுதிக்கு சென்ற 3 வயது சிறுமி எதிர்பாராதவிதமாக ஜன்னலில் இருந்து தவறி விழும் நிலைக்கு சென்றார். அப்போது ஜன்னல் விளிம்பை பிடித்து தொங்கியபடி சிறுமி அலறித்துடித்தார்.

இதை கடையின் கீழ் நின்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டனர். உடனே ​​ஒரு பெண் கீழ்ப்புற ஜன்னலில் இருந்து மேலே கையை நீட்டினார். ஆனால் சிறுமி தனது பிடியை இழப்பது போல் தோன்றியது.

அப்போது, ​​ஒரு போலீஸ்காரரும் அப்பகுதியில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்தவருமான முகமது ஜெசிலும் கடையின் மேற்கூரை வழியே நடந்து சென்று சிறுமியை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர்.

போலீஸ்காரரும், ஜெசிலும் சிறுமிக்கு நேர் கீழே நின்று கொண்டனர். அடுத்த சில நொடிகளில் சிறுமி கீழே விழுந்தபோது, ​​ஜெசில் அவளை பிடித்துக்

கொள்ள, போலீஸ்காரர் அவர்களை நிலைப்படுத்த உதவினார். இதனால் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.

இதை கீழே இருந்து பார்த்தவர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி பாராட்டினர். சிறுமியை காப்பாற்றிய ஜெசில் அங்குள்ள ஒரு உணவகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கு 5 மாதத்தில் இரட்டைக் குழந்தைகள் உள்ளன.

அவர் கூறுகையில், சிறுமி தொங்கி கொண்டிருப்பதை பார்த்ததும் நான் சிறிதும் யோசிக்கவில்லை. நான் ஒன்றும் கதாநாயகன் அல்ல, ஒரு குழந்தை சிக்கலில் இருப்பதைப் பார்த்த தந்தையாக அதைச் செய்தேன்.

சிறுமி கீழே விழுந்தபோது அவளை பத்திரமாக பிடித்தபோது எனக்குப் பெரும் நிம்மதி ஏற்பட்டது. அவள் எதுவும் பேசாமல், என்னை இறுக அணைத்துக்கொண்டாள். அவளுக்கு உதவியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

நான் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடி உள்ளேன். அதனால் அது நான் சிறுமியை கேட்ச் பிடிப்பதற்கு உதவியிருக்கலாம். நான் கவனம் செலுத்த வேண்டும் என்பது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தது என்றார்.

அந்தச் சிறுமியின் தந்தை, ஜெசிலையும், போலீஸ்காரரையும் அற்புதமான நாயகர்கள் என்று பாராட்டினார். இதற்கிடையே சிறுமியை இந்திய வாலிபர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.