உலகம்

அமெரிக்க ஐடி வேலையை உதறிய இந்தியர் - மாதம் ரூ.60 கோடி லாபத்தில் விவசாயம்

அமெரிக்காவில் ஐடி வேலையை விட்டுவிட்டு மாதம் ரூ.60 கோடி லாபத்தில் விவசாய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய நபர்.

அமெரிக்காவில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்து வந்த ஒருவர், தனது வசதியான வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு அதன்மூலம் ரூபாய் 600 கோடி மதிப்பிலான தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து விகாஷ் என்பவர் பகிர்ந்த எக்ஸ் பதிவில், ஐடி ஊழியரின் கடின உழைப்புக்கு பலனாக தொழில் முனைவோராக உருவெடுத்து, அவரது விவசாய நிறுவனம் மாதம் ரூ.60 கோடி லாபம் ஈட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஐடி ஊழியர்

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் சசி குமார் என்பவர் பி.டெக் பட்டம் பெற்ற பிறகு, 12 ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள விப்ரோ நிறுவனத்தில், ஐடி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

பின்னர் அவர் அக்‌ஷயகல்பா என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவில் தனது வேலையை விட்டு விலகினார்.

இதையடுத்து இவர் ஆரம்பித்த விவசாய தொழில், முதல் 9 ஆண்டுகளில் ஆறு முறை திவால் நிலையின் விளிம்பிற்கு சென்றது.

அப்போது அவரது மனைவியின் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேமிப்புத் தொகையின் உதவியால், அவர் ஆரம்பித்த விவசாய தொழில் கடினமான காலங்களில் இருந்து மீண்டு வந்தது.

விவசாய தொழில்

இந்த நிலையில் ஐடி ஊழியரின் விவசாய தொழில் சாம்ராஜ்ஜியம் குறித்து விகாஷ் என்பவர் பகிர்ந்த எக்ஸ் பதிவில், அக்‌ஷயகல்பா அமைப்பில் தற்போது 2,800 விவசாயிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவசாய நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1.28 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாகவும், இதன் வருடாந்தர செலுத்துதல் தொகை ரூ.480 கோடியாக உள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 60 கோடி ரூபாய் லாபம் ஈடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயனர்கள் வரவேற்பு

விகாஷ் என்பவர் பகிர்ந்த இந்த பதிவிற்கு பயனர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஒருவர் அந்த பதிவிற்கு, தான் அந்த விவசாய நிறுவனத்தினுடைய சாச் (மோர்) பானத்தை சுவைத்திருக்கிறதாகவும், அது மிகவும் சுவையுள்ளதாக இருப்பதாகவும் பதிவிட்டார்.

மேலும் அது சந்தையில் கிடைக்கும் மற்ற பிராண்டின் விலையை விட சற்று அதிகமாக இருப்பதாகவும், இருந்தாலும் அது அதன் விலைக்கு ஏற்ப தகுதியான தரத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.