அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய வழக்கில், இந்தியரான நிகில் குப்தாவிற்கு அமெரிக்க நீதிமன்றம் 19 ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அமெரிக்க மற்றும் கனடா ஆகிய இரு குடியுரிமைகளையும் பெற்ற இந்திய வம்சாவளி வழக்கறிஞர் குர்பத்வந்த் சிங் பன்னூன்.
இந்தியாவில் இருந்து பஞ்சாபை பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாதியாக அவர் அறியப்படுகிறார்.
'சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்' என்ற அமைப்பை அவர் நடத்தி வந்தார். அந்த அமைப்பை தடை செய்த இந்தியா பன்னூனை பயங்கரவாதியாக அறிவித்தது.
இதனிடையே நியூயார்க்கில் பன்னூனை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிகில் குப்தா என்பவர் கைது செய்யப்பட்டார்.
பன்னூனைக் கொலை செய்ய ஒருவரைக் கூலிக்கு அமர்த்த பணம் கொடுக்க சதித்திட்டம் தீட்டியது, கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது, மற்றும் பணமோசடி சதித்திட்டத்தில் ஈடுபட்டது ஆகிய குற்றங்களை நிகில் குப்தா இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டிருந்தார்.
நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி விக்டர் மரெரோ, விசாரணைக்குப் பிறகு, குப்தாவிற்கு 235 மாதங்கள் (19 ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்கள்) சிறைத் தண்டனை விதித்தார்.
நியூயார்க்கில் நீதிமன்ற விசாரணைக்கு முன்பு, பன்னூனின் ஆதரவாளர்கள் பலர் நீதிமன்றத்திற்கு வெளியே கூடினர்.
இந்த சதித்திட்டத்தில் எந்த இந்திய அதிகாரிகளுக்கும் தொடர்பில்லை என இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
ஆனால் அமெரிக்க அரசு வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, அப்போது இந்திய அரசாங்க ஊழியராக இருந்த விகாஷ் யாதவ், 2023 மே மாதம் நிகில் குப்தாவைத் தொடர்புகொண்டு, பன்னூனைக் கொல்வதற்காக ஒருவரை நியமிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
யாதவின் அறிவுறுத்தல்களின்படி, குப்தா தனது குற்றக் குழுவின் உறுப்பினர் என்று நினைத்த ஒருவரைத் தொடர்பு கொண்டார்.
ஆனால் உண்மையில் அவர் அமெரிக்க போதைப்பொருள் அமலாக்க நிர்வாகத்துடன் பணிபுரியும் ஒரு ரகசிய உளவாளியாக இருந்தார்.
தகவல் கொடுத்தவர் குப்தாவை மற்றொரு நபருக்கு அறிமுகப்படுத்தினார். பன்னூனைக் கொல்வதற்காக அந்த நபரை வேலைக்கு அமர்த்துவதாக குப்தா கூறினார்.
பன்னூனின் கொலைக்காக 100,000 டாலர் செலுத்த யாதவ் ஒப்புக்கொண்டிருந்தார். அதில் 15,000 டாலர் நியூயார்க்கில் முன்பணமாக செலுத்தப்பட்டதாக அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குப்தா அந்த நபரிடம் பன்னூனின் வீட்டு முகவரி, தொலைபேசி எண்கள், அவரது அன்றாட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் மற்றும் அவர் கண்காணிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகியவற்றை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
நிகில் குப்தா 2023 ஜூன் 30 அன்று செக் குடியரசின் பிராக் நகரில் கைது செய்யப்பட்டார். அவர் 2024 ஜூன் மாதம் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார். விகாஷ் யாதவ் இன்னும் அமெரிக்கக் காவலில் எடுக்கப்படவில்லை.
இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க இந்தியா ஒரு விசாரணைக் குழுவை அமைத்திருந்தது. ஜனவரி 2025ல், குற்றப் பின்னணியும் தொடர்புகளும் கொண்ட ஒரு நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அக்குழு பரிந்துரைத்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இருப்பினும், அந்த நபர் விகாஷ் யாதவ் தானா என்பதை அமைச்சகம் குறிப்பிடவில்லை.
இதனிடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முன்னாள் ரா தலைவர் சமந்த் கோயல் ஆகியோருக்கு எதிராக பன்னூன் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நவம்பர் 13 தேதியிட்ட நீதிமன்ற உத்தரவில், இந்த இரண்டு அதிகாரிகளுக்கும் டெல்லி நீதிமன்றங்கள் மூலம் சம்மன் அனுப்பப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக, வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால், "எங்கள் மூத்த அதிகாரிகளுக்கு எதிராகக் கூறப்பட்ட புனையப்பட்ட மற்றும் தீய நோக்கமுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம்" என்று கூறியிருந்தார்.