உலகம்

சவுதி அரேபிய விமான நிலைய தாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள விமான நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) நடந்த ஏவுகணை தாக்குதலில் காயமடைந்த இந்தியர் இன்று உயிரிழந்தார்.

அவரது மரணத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு, அண்டை நாடான ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களே காரணம் என சவுதி தலைமையிலான கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம், இந்திய குடிமகன் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், உடலை தாயகம் அனுப்புவதற்கு அவர்களுக்கு ஆதரவளிக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

எக்ஸ் தளப் பதிவு:

"அக்டோபர் 10-ஆம் தேதியன்று ரியாத் விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் குறித்த சமீபத்திய தகவல், ரியாத் தாக்குதலில் காயமடைந்த இந்தியர் ஒருவர் இன்று துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

நாங்கள் அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம். மேலும் அவரது உடலை விரைவில் தாயகம் கொண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குவோம்," என்று இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு விமான பயணங்களுக்கான 3 மற்றும் 4 ஆம் முனையங்களை கொண்ட கிங் காலித் சர்வதேச விமான நிலைய வளாகத்தை ஏவுகணை தாக்கியது.

இந்தியா கண்டனம்:

சர்வதேச விமான நிலையத்தின் மீதான ஏவுகணை தாக்குதலுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. பொதுமக்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகள் மீதான இதுபோன்ற தொடர்ச்சியான தாக்குதல்கள் "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்றும் கூறியுள்ளது.

"உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் சொத்து சேதங்களுக்கு வழிவகுத்த, அக்டோபர் 10-ஆம் தேதியன்று நடந்த கோழைத்தனமான தாக்குதல் உட்பட, கடந்த சில நாட்களாக ரியாத்தின் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்," என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை:

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, எந்தவொரு வளைகுடா அரபு நாட்டிலும் நடந்த மிக மோசமான தாக்குதல் சனிக்கிழமையன்று நடைபெற்றது.

சனிக்கிழமையன்று சவுதி வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களில் நான்கு சவுதி குடிமக்கள், இரண்டு வங்கதேச நாட்டினர், ஒரு பாலஸ்தீனியர், ஒரு அமெரிக்கர், ஒரு எகிப்தியர், ஒரு ஜோர்டானியர், ஒரு சிரியர் மற்றும் ஒரு சூடானியர் ஆகியோர் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அது தெரிவித்தது.

SCROLL FOR NEXT