உலகம்

ஓமன் கடற்பரப்பில் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் - இந்தியர் உயிரிழப்பு

ஒருங்கிணைந்து செயல்படுமாறு கடல்சார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஓமனின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால், ஆன்டிகுவா மற்றும் பார்புடா நாட்டு கொடியை ஏந்திய எம்.வி. கேப் டாவோ என்ற சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த வைப்பர் சூரஜ் யாதவ் என அடையாளம் காணப்பட்ட இந்திய மாலுமி கொல்லப்பட்டார் என்றும், கப்பலில் இருந்த மற்ற 19 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று அரசாங்கம் தெரிவித்தது.

தாக்குதலில் தலையில் ஏற்பட்ட காயங்களால் யாதவ் உயிரிழந்தார் என மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார். அந்த கப்பலில் 20 இந்திய மாலுமிகள் இருந்தனர். உயிர் பிழைத்த மாலுமிகள் ஓமன் அரச கடற்படையால் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டனர்.

அரசு உறுதி செய்யும்:

உயிர் பிழைத்த இந்திய குழுவினரை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் தாயகம் திரும்ப அழைத்து வருவதற்காக, ஓமன் அதிகாரிகள் மற்றும் கப்பல் மேலாண்மை நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கடல்சார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக சோனோவால் தெரிவித்தார்.

"சூரஜ் யாதவின் உடல் முழு கண்ணியத்துடன் தாயகம் கொண்டுவரப்படுவதையும், அவரது உறவினர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதையும் அரசு உறுதி செய்யும்," என்று சோனோவால் கூறினார்.

இந்தியா தாக்குதலை கண்டிக்கிறது வெளியுறவு அமைச்சகம் இந்த தாக்குதலை கண்டித்ததோடு, அப்பகுதியில் வர்த்தக கப்பல்களை குறிவைத்து தொடரும் சம்பவங்கள் “மிகுந்த கவலையளிப்பதாக” கூறியுள்ளது. கப்பலில் இருந்த 20 இந்திய மாலுமிகளில் 19 பேர் மீட்கப்பட்ட நிலையில், ஒரு இந்தியர் துயரமான முறையில் உயிரிழந்தார்.

தாக்குதல் சம்பவங்கள் மிகுந்த கவலையளிக்கிறது:

"மறைந்தவரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்" என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

ஓமனில் உள்ள தனது தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், இந்திய மாலுமிகளை விரைவில் தாயகம் திரும்ப அழைத்து வருவதற்காக ஓமன் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் அமைச்சகம் தெரிவித்தது.

"பிராந்தியத்தில் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்வது மிகுந்த கவலையளிக்கிறது. பதற்றத்தை தணிப்பதற்கும், பிராந்தியத்தில் விரைவில் அமைதி திரும்புவதற்கும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எங்கள் அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறோம்," என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

SCROLL FOR NEXT