கோல்டி பிரார் 
உலகம்

அமெரிக்காவின் டாப் 10 தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இந்திய ரவுடி.. தகவல் கொடுத்தால் ரூ.9 கோடி!

கொலைகள், கடத்தல்கள், கொள்ளைகள், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகம் உள்ளிட்ட பல குற்றங்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக எப்பிஐ கூறியுள்ளது.

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்பிஐ அமைப்பின் "மிகவும் தேடப்படும் முதல் 10 பேர்" பட்டியலில் இந்திய ரவுடி கோல்டி பிரார் இடம்பிடித்துள்ளார்.

சதிந்தர்ஜீத் சிங் என்ற கோல்டி பிரார் குறித்து தகவல் தந்தால் ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ. 9.6 கோடி) பெரும் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் எப்பிஐ நேற்று இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

"கோல்டி பிரார் மிகவும் ஆபத்தான நபர். அவரைக் கைது செய்வதே எங்களின் முதன்மையான முன்னுரிமை," என்று FBI அதிகாரி பேட்ரிக் கிராண்டி கூறினார்.

குற்றச்சாட்டுகள்

இந்தியாவின் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சர்வதேச அளவில் இயங்கி வருகிறது. இந்த கும்பலின் வட அமெரிக்க நடவடிக்கைகளுக்கு கோல்டி பிரார் தலைமை தாங்குவதாக எப்பிஐ குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் கொலைகள், கடத்தல்கள், கொள்ளைகள், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகம் உள்ளிட்ட பல குற்றங்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக எப்பிஐ கூறியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் அவர் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் தற்போது குஜராத்தில் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயுடன் சேர்ந்து, கனடாவில் 2023ஆம் ஆண்டு சீக்கியப் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கோல்டி பிரார் மீது எப்பிஐ குற்றம் சாட்டியுள்ளது.

கோல்டி பிராருக்கு முன்பு 50,000 டாலர் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது1 மில்லியன் டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபை சேர்ந்த பிராரை, இந்தியா மற்றும் கனடாவில் உள்ள புலனாய்வு முகமைகளும் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT