உலகம்

சீனாவில் இருந்தபடி ஹைதராபாத் நோயாளிக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர்!

சீனாவில் இருந்தபடி, ஹைதராபாத் நோயாளிக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர்.

சீனாவின் வூஹானில் இருந்தபடியே, இந்திய நிபுணர் டாக்டர் சையத் முகமது கவுஸ் 5G மற்றும் ரோபோடிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 3,000 கி.மீ தொலைவில் ஹைதராபாத்தில் இருந்த நோயாளிக்கு வெற்றிகரமாக சிறுநீர்க்குழாய் அறுவை சிகிச்சை செய்தார்.

சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சையில், நோயாளிக்குச் சிறுநீர்ப்பை மறுசீரமைப்பு வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது.

இந்த வரலாற்று சாதனையை இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யு ஜிங் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சிகிச்சையின் போது, மருத்துவர் சையத் அங்கு கையசைத்தால், அந்த அசைவு 0.2 வினாடிகள் தாமதமாகத்தான் ரோபோவால் இங்கு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சீனாவில் நடந்த 10-வது சர்வதேச மருத்துவ மாநாட்டில், 5 நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் நேரலையாகச் செய்து காட்டிய 26 ரிமோட் அறுவை சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகும்.

செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் மற்றும் 5G தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சி உலகளாவிய சுகாதார அமைப்பை வேகமாக மாற்றி அமைத்து வருவதாக டோங்ஜி மருத்துவமனை இயக்குநர் சென் சியாவோபிங் குறிப்பிட்டுள்ளார்.