உலகம்

அமெரிக்காவில் புதிய AI கல்லூரிக்கு இந்திய தம்பதியின் பெயர் சூட்டப்படும் - டெக்சாஸ் பல்கலைக்கழகம் அறிவிப்பு!

"அனுராதா மற்றும் விகாஸ் சின்ஹா செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுக் கல்லூரி" எனப் பெயரிடப்படவுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்திற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் தம்பதியினர் (20 மில்லியன்) இந்திய மதிப்பில் சுமார் ரூ.165 கோடிக்கும் மேல் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இவர்களின் இந்த பெருந்தொகையான பங்களிப்பைப் பாராட்டும் விதமாக, அங்கு புதிதாகத் தொடங்கப்படவுள்ள செயற்கை நுண்ணறிவு கல்லூரிக்கு இவர்களது பெயர் சூட்டப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புதிதாக உருவாக்கப்படும் இந்த கல்வி நிறுவனத்திற்கு "அனுராதா மற்றும் விகாஸ் சின்ஹா செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுக் கல்லூரி" என்று பெயரிடப்படவுள்ளது.

செயற்கை நுண்ணறிவின் புதிய மையப்புள்ளி

இந்த புதிய கல்லூரி, செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், சைபர் பாதுகாப்பு, ஹெல்த் இன்ஃபர்மேடிக்ஸ் மற்றும் தகவல் அறிவியல் போன்ற பல்வேறு அதிநவீன தொழில்நுட்பத் துறைகளை ஒருங்கிணைக்கும் ஒரு முதன்மை ஆராய்ச்சி மையமாகச் செயல்படும்.

இது இரண்டு முக்கிய பிரிவுகளாகச் செயல்படவுள்ளது.

Division of Applied Intelligence and Informatics:

புத்திசாலித்தனமான கணினி அமைப்புகளை உருவாக்குவதிலும், அவற்றை செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்தும்.

Division of Information and Learning Applications

மனித மற்றும் நிறுவனச் சூழல்களில் இந்தத் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை ஆராயும்.

மேலும், இந்த நன்கொடை மூலம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, பேராசிரியர் பதவிகள், தொழில்முனைவோர் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி ஆகியவற்றை ஆதரிக்க ஆறு நிரந்தர நிதியுதவிகள் நிறுவப்படவுள்ளன.

அமெரிக்க கனவை குடியேறியவர்கள் உருவாக்குகிறார்கள்

இந்த நன்கொடை குறித்து பிராட்காம் நிறுவனத்தின் துணைத் தலைவரான விகாஸ் சின்ஹா பேசுகையில், "கல்வி மட்டுமே எங்கள் வாழ்வில் பல கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது.

அந்த வாய்ப்புகளை மற்றவர்களுக்கும் வழங்கவே நாங்கள் இதைச் செய்கிறோம்.

அமெரிக்காவில் குடியேறுபவர்கள் வெறும் அமெரிக்கக் கனவில் பங்கேற்பவர்கள் மட்டுமல்ல, அதை உருவாக்குபவர்களும் கூட என்பதை உணர்த்துவதே இந்த நன்கொடையின் நோக்கம்" என்று பெருமிதத்துடன் கூறினார்.

யார் இந்த அனுராதா - விகாஸ் சின்ஹா தம்பதி?

இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, இந்த தம்பதியினர் மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்றனர்.

புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற விகாஸ் சின்ஹா, பின்னர் 2023 இல் UNT பல்கலைக்கழகத்தில் தனது பிஎச்டி படிப்பை முடித்தார்.

முன்னதாக 2024 ஆம் ஆண்டில் தரவு அறிவியல் துறையை உருவாக்கவும், 2025 இல் 'சின்ஹா இன்னோவேஷன் லேப்' அமைக்கவும் இவர்கள் இந்த பல்கலைக்கழகத்திற்குப் பெருமளவில் நிதியுதவி செய்துள்ளனர்.

இவர்களின் இந்த மிகப்பெரிய பங்களிப்பு, மாறிவரும் உலகளாவிய வேலைவாய்ப்பு சந்தைக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தவும், பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் உதவும் என்று UNT தலைவர் ஹாரிசன் கெல்லர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT