ஜூலிசா ரூபி சலார், வருண் பட்சிகாரி 
உலகம்

அமெரிக்க காதலியை கொன்று தப்பியோடிய இந்திய இளைஞர் ஜெர்மனியில் கைது

ஜூலிசா, வருனுடனான காதலை முறித்துக் கொள்ள திட்டமிட்டிருந்தார்

அமெரிக்காவில் 19 வயது கல்லூரி மாணவி ஜூலிசா ரூபி சலார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது இந்தியக் காதலனான வருண் பட்சிகாரி (20) என்பவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளான்.

கொலை

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள டக்சன் பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில், ஜூலிசா சலார் பலத்த காயங்களுடன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

மகளைக் காணவில்லை என்று பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட சோதனையிலேயே இது கொடூரமான கொலை என்பது உறுதியானது.

கொலையாளி வருண், ஜூலிசாவின் மொபைல் போன் மற்றும் கிரெடிட் கார்டுகளைத் திருடிக் கொண்டு தப்பியோடினான்.

தப்பியோட முயற்சி

ஜூலிசாவின் போனில் இருந்து அவருடைய தாயாருக்கு சந்தேகத்திற்குரிய வகையில் குறுஞ்செய்தி வந்ததை அடுத்து, காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்தது.

விசாரணையில், ஜூலிசாவை கொலை செய்த அதே நாளில் வருண், டக்சன் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து ஹூஸ்டன் வழியாக ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. அங்கிருந்து இந்தியாவிற்குத் தப்பிக்க அவன் திட்டமிட்டிருந்தான்.

ஜெர்மனியில் கைது

வருண் மீது கடத்தல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

அமெரிக்காவின் எப்.பி.ஐ, இன்டர்போல் உடன் இணைந்து செயல்பட்டு, ஜெர்மனியை சென்றடைந்த வருணை அங்கேயே கைது செய்தது.

ஜூலிசா, வருனுடனான காதலை முறித்துக் கொள்ள திட்டமிட்டிருந்தார் என்றும், அதற்கு முன்பே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

அரிசோனா பல்கலைக்கழகத்தில் பிசினஸ் அனலிட்டிக்ஸ் படித்து வந்த வருண், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டவன் என்பதும், அவன் மீது வேறு சில வழக்குகளும் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.