வங்கதேச நாடாளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தின் அகமது, இந்தியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு கடத்தப்படாவிட்டால், இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை அணுகுவேன் என்று வங்கதேச நாடாளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத் எச்சரித்துள்ளார்.
ஹசீனாவின் ஆட்சிக்காலத்தில், இந்தியா 15 ஆண்டுகளாக வங்கதேசத்தை ஒரு காலனி போல நடத்தியதாகவும், நாட்டைச் சுரண்டியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சபாநாயகர் ஹபீஸ் உத் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட ஆறு நாள் பயணத்தின்போது அங்கு வைத்து இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
1971 வங்கதேச விடுதலைப் போரில் இந்தியாவின் பங்கு குறித்தும் சபாநாயகர் கேள்வி எழுப்பினார்.
இந்தியாவின் நோக்கம் வங்காள மக்களுக்கு உதவுவது அல்ல, மாறாக பாகிஸ்தானைப் பலவீனப்படுத்துவதே என்று அவர் குற்றம் சாட்டினார்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக்கிற்கு எதிராகவும் சபாநாயகர் கருத்து தெரிவித்தார்.
அரசியல் வன்முறைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அக்கட்சி ஒரு பயங்கரவாத அமைப்பாக மாறிவிட்டதாகவும், அதனைத் தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, இடைக்கால அரசாங்கம் அவாமி லீக்கை அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தடை செய்திருந்தது. பிப்ரவரி 2026 தேர்தலில் போட்டியிடுவதற்கும் அக்கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில், காஷ்மீர் பிரச்சினை குறித்த பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு ஹபீஸ் உத்தின் அகமது ஆதரவு தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சினை ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு இணங்க தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் அவர்களின் அழைப்பின் பேரில், ஹாபிஸ் உத்தின் அகமது நவம்பர் 23 அன்று ஆறு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றார்.
ஒரு வங்கதேச நாடாளுமன்ற சபாநாயகர் பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.
அவர் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரையும் சந்தித்தார்.
சில காலமாகப் பகைமையில் இருந்துவரும் வங்கதேசமும் பாகிஸ்தானும் தங்களது உறவுகளை மேம்படுத்த முயன்று வரும் வேளையில், சபாநாயகரின் இந்திய எதிர்ப்புக் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
வங்கதேசம் பாகிஸ்தானுடன் நெருங்கிய தூதரக உறவுகளை நாடுவதோடு, ஹசீனாவை நாடு கடத்தக் கோருமாறு இந்தியா மீது அழுத்தத்தையும் அதிகரித்து வருகிறது.
ஷேக் ஹசீனா அடுத்த மாதம் 16 ஆம் தெத்து வங்கதேச வெற்றி தினத்தன்று நாடு திரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் அவரை கைதியாகவே தாங்கள் அழைத்துக் கொள்வோம் என வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
அதேநேரம் அவர் மீதும் தங்கள் கட்சி தலைவர்கள் மீதுமான வழக்குகளை நீக்க கோரி அவாமி லீக் கட்சியினர் நடத்தி வரும் போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ளது.
ஷேக் ஹசீனாவுக்கு, 2024 மாணவர் போராட்டத்தின்போது அடக்குமுறையை ஏவி மனிதநேயத்திற்கு எதிரான குற்றம் புரிந்ததற்காக டாக்காவில் உள்ள சர்வதேச தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.