இந்தியப் பாதுகாப்புத் துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், பிரான்ஸ் அரசு முன்னெடுக்கும் 6-ஆம் தலைமுறை போர் விமானக் கூட்டு உருவாக்கத் திட்டமான 'Future Combat Air System' (FCAS) திட்டத்தில் இணைவதற்கு இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நாடாளுமன்றப் பாதுகாப்புச் நிலைக்குழுவிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையில், பிரான்ஸ் தலைமையிலான 6-ஆம் தலைமுறை போர் விமானத் திட்டத்தில் இணைவதற்கான செயல்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 4.5 தலைமுறை போர் விமானங்கள் (ரஃபேல், தேஜாஸ் போன்றவை) பயன்பாட்டில் உள்ளன.
உள்நாட்டிலேயே 5-ஆம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் 'AMCA' திட்டம் தயாரிப்பு நிலையில் உள்ள நிலையில், சர்வதேச நாடுகளுடன் இணைந்து 6-ஆம் தலைமுறை தொழில்நுட்பத்தில் தடம் பதிப்பது நாட்டின் வான்வழிப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும்.
6-ஆம் தலைமுறை போர் விமானங்கள் வெறும் மனிதரால் இயக்கும் விமானமாக மட்டும் இல்லாமல், செயற்கை நுண்ணறிவு (AI), ஆளில்லா ட்ரோன்கள் மற்றும் கிளவுட் தகவல்தொடர்பு பிணையம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்படும்.
நவீன போர்மறைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, இந்திய விமானப்படை இத்தகைய தொழில்நுட்பங்களில் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காக, புதிய 6-ஆம் தலைமுறை போர் விமானங்களை கையகப்படுத்துவதற்கான தெளிவான வரைபடம் மற்றும் காலக்கெடுவை வரையறுக்குமாறு நாடாளுமன்றக் குழு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சர்வதேச அளவிலான உயர் தொழில்நுட்ப கூட்டுத் திட்டங்களில் பங்கெடுப்பது, 'ஆத்மநிர்பார் பாரத்' கொள்கையின் கீழ் உள்நாட்டு பாதுகாப்பு தயாரிப்புத் திறனையும், தொழில்நுட்பப் பகிர்வையும் பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.