ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் ராணுவத்தினர் போர் தொடங்கி தாக்குதல் நடத்தி வருகின்றனர். 30 நாட்களாக நீடித்து வரும் இந்த போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு கிடைக்கும் பெட்ரோல்-டீசல் எரிபொருட்கள் மற்றும் கியாஸ் வினியோகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரான் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியா, சீனா உள்ளிட்ட சில நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹார்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதித்துள்ளது.
இதனால் இந்தியாவுக்கு இதுவரை சில கப்பல்களில் எரிபொருட்கள் வந்துசேர்ந்துள்ளன. இந்தியாவிடம் இருந்து எரிபொருள் வாங்கி வந்த இலங்கை மற்றும் வங்காளதேசத்துக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
இந்தநிலையில் இந்தியா சார்பில் இலங்கைக்கு எரிபொருள் வழங்கி உதவுவதாக இந்தியா அறிவித்தது. இதுகுறித்து இந்திய பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை நாட்டின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து இலங்கைக்கு 38 ஆயிரம் டன் எரிபொருள் வழங்குவதாக இந்தியா அறிவித்தது. அதன்படி 20 ஆயிரம் டன் டீசல் மற்றும் 18 ஆயிரம் பெட்ரோல் பாரத்துடன் இந்தியாவின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் டேங்கர்கள் இலங்கை சென்றடைந்தது.
உலகளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் இந்தியாவின் இந்த உதவிக்கு இலங்கை அரசு நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயக தனது எக்ஸ் பக்கத்தில், "இந்திய பிரதமர் மோடியுடன் சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பேசியிருந்தேன். உடனடியாக உதவுவதாக தெரிவித்த அவர் 38 ஆயிரம் டன் எரிபொருள் அனுப்பி வைத்துள்ளார். போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்துக்கு பத்திரமாக வந்து சேர்ந்ததற்கு நான் மனமார நன்றி தெரிவித்து கொள்கிறேன் " என்று கூறியுள்ளார்.
மேலும் மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் 1 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் முறையே ரூ.381 மற்றும் ரூ.370-க்கு விற்பனையாகிறது.