உலகம்

இந்தியாவில் LPG எரிவாயு பயன்பாடு 12.8% சரிவு! | Iran war

இந்தியா தனது எல்பிஜி தேவையில் 60 சதவீதத்தை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது.

ஈரான் போர் மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடியால் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் எரிவாயு பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளது.

மத்திய அரசின் பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (PPAC) சமீபத்திய அறிக்கையின்படி,

கடந்த 2025 மார்ச் மாதத்தில் 2.729 மில்லியன் டன்னாக இருந்த எல்பிஜி பயன்பாடு, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 2.379 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது. இது 12.8% சரிவாகும்.

வீட்டு உபயோக விநியோகம் 8.1 சதவீதமும், வணிக ரீதியான விநியோகம் 48 சதவீதமும், பெரிய அளவிலான தொழில்முறை பயன்பாடு 75.5 சதவீதம் சரிந்துள்ளது.

இந்தியா தனது எல்பிஜி தேவையில் 60 சதவீதத்தை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது.

இதில் பெரும் பகுதி சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. ஈரான் இந்த வழியை மூடியதால், கப்பல் போக்குவரத்து முடங்கி தட்டுப்பாடு ஏற்பட்டது.

இறக்குமதி குறைந்ததைச் சமாளிக்க, இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 11 லட்சம் டன்னாக இருந்த எல்பிஜி உற்பத்தி, இந்த மார்ச் மாதத்தில் 14 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் ஓரளவு விநியோகம் சீராக இருந்தாலும், ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.