உலகம்

உலகளாவிய தொழில்நுட்பப் புரட்சியை இந்தியா வழிநடத்துகிறது! ‘பாரத் இன்னோவேட்ஸ்’ மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் புகழாரம்!!

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை விட ஆண்டுக்கு 10 லட்சம் பொறியாளர்களை உருவாக்கி இந்தியா சாதனை..

உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா மிகவும் முக்கியப் பங்கு வகித்து வருவதாகப் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மனதாரப் பாராட்டியுள்ளார்.

மேலும், உலகப் புத்தாக்கத் துறையை இந்தியா தற்போது முன்னின்று வழிநடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் இன்று தொடங்கிய 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பங்கேற்றுப் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியதாவது,

அமெரிக்கா, ஐரோப்பாவை விட அதிக பொறியாளர்கள்..

"140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, ஆராய்ச்சி மற்றும் அறிவுத் திறனுக்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கிறது. அமெரிக்கா மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும், இந்தியா ஆண்டுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான பொறியாளர்களை உருவாக்கி சாதனை படைக்கிறது.

எனவே, அனைத்து விதங்களிலும் உலகளாவிய புதிய கண்டுபிடிப்புகளை முன்னின்று வழிநடத்தும் தகுதி இந்தியாவிற்கு உள்ளது.

இனி 'இந்தியா புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குமா?' என்ற கேள்விக்கே இடமில்லை. 'இந்தியாவோடு இணைந்து யார் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கப் போகிறார்கள்?' என்பதுதான் இப்போதைய கேள்வி" என்று அதிபர் மேக்ரான் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு வெளியே நடக்கும் முதல் 'பாரத் இன்னோவேட்ஸ்' மாநாட்டைத் தனது நாட்டில் நடத்துவதில் பிரான்ஸ் பெருமை கொள்வதாகவும் அவர் கூறினார்.

பிரதமர் மோடிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்த்து..

இந்தியாவின் சுதந்திரத்திற்கப் பிறகு நீண்டகால பிரதமராகப் பதவி வகிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் மேக்ரான் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்."இந்த நீண்ட காலப் பயணம் உங்களது உறுதியான செயல்பாட்டையும், தலைமைப் பண்பையும், இந்தியாவின் அளவற்ற வலிமையையும் உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது" என புகழாரம் சூட்டியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் திறந்தவெளி மாதிரி..

சில நாடுகள் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கான அணுகுமுறைகளைக் கட்டுப்படுத்தவும், அதை தங்களின் சக்தி வாய்ந்த ஆயுதமாக மாற்றவும் முயலும் வேளையில், இந்தியாவும் பிரான்சும் திறந்தவெளி மற்றும் கூட்டு ஏஐ மாதிரிகளை ஆதரிப்பதாக மேக்ரான் தெரிவித்தார். மேலும் உலக நன்மைக்காக பன்னாட்டு ஏஐ கூட்டுறவை இரு நாடுகளும் வலுப்படுத்தும் என்றார்.

சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு..

பருவநிலை மற்றம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் இரு நாடுகளின் கூட்டணியைச் சுட்டிக்காட்டிய அவர், 'சர்வதேச சூரியசக்தி கூட்டணி' மற்றும் ஜெய்தாபூர் அணுமின் திட்டம் உள்ளிட்ட கூட்டு முயற்சிகளை நினைவு கூர்ந்தார். நிச்சயமாக தூய்மையான எரிசக்தி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளின் எதிர்காலத்தை உருவாக்க இருநாடுகளும் இணைந்து பணியாற்றும் என்று உறுதியளித்தார்.

3 நாட்கள் நடைபெறும் மாநாடு..

இந்தியா - பிரான்ஸ் புத்தாக்க ஆண்டின் முக்கிய மைக்கல்லாக, இன்று முதல் (ஜூன் 14 - 16) ஆகிய மூன்று நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த இரு நாடுகளைச் சேர்ந்த முன்னணி புத்தொழில் நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு வலுவான தளமாக இம்மாநாடு அமைந்துள்ளது