இந்தியா-இஸ்ரேல் ஹேக்கத்தான்: மின்சாரமில்லா புதுமை சக்கர நாற்காலி அறிமுகம்  
உலகம்

இந்தியா, இஸ்ரேல் இணைந்து முதல் ஹேக்கத்தான் நிகழ்ச்சி - மின்சாரமில்லாமல் இயங்கும் சக்கர நாற்காலி அறிமுகம்

இந்த ஹேகத்தான் நிகழ்வில் இந்தியா மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த 1,300 இளம் கண்டுபிடிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஒன்றாக இணைந்து முதல் ஹேக்கத்தான் நிகழ்வில் கலந்துகொண்டன. இந்த நிகழ்வின் மூலம் விபத்தில் காயமடைந்து கை மற்றும் கால்கள் அசைவின்றி இருக்கும் நபர்கள் இயங்கும் வகையில் மின்சாரம் இல்லாமல் இயங்கும் எளிதாக இயங்கும் சக்கர நாற்காலி முன்மாதிரியை அறிமுகம் செய்துள்ளது.

ஹேக்கத்தான் நிகழ்வு

ஹேக்கத்தான்கள் என்பது பங்கேற்பாளர்கள் குறிப்பிட்ட சிக்கல்களுக்கான முன்மாதிரிகளை அல்லது தீர்வுகளை உருவாக்கும், காலவரையறைக்குட்பட்ட புத்தாக்க நிகழ்வுகளில் ஒன்றாகும்.

புனர்வாழ்வுத் தொழில்நுட்பம் என்பது காயம், அறுவை சிகிச்சை அல்லது நோய்க்குப் பிறகு உடல் குணமடைவதற்காக பயன்படுத்தப்படும் சாதனங்கள் மற்றும் அமைப்புகளை உள்ளடக்கியது.

நடமாடுவதற்கு உதவும் சாதனங்களில் சக்கர நாற்காலிகள், கை, கால் ஆதரவு அமைப்புகள் மற்றும் இயக்கத்திற்கு உதவும் கருவிகள் ஆகியவை அடங்கும்.

இந்தியா இஸ்ரேல் ஹேக்கத்தான் பங்கேற்பு

மீட்பு சுகாதாரப் பராமரிப்பு என்ற கருப்பொருளுடன், முதல் இந்தியா-இஸ்ரேல் ஹேக்கத்தான் இன்றுடன் நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் நோயாளிகள் நடமாட்டம் தொடர்பான 14 சிக்கல் கூற்றுகளில் பணியாற்றுவதற்காக, இந்தியா மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த 1,300 இளம் கண்டுபிடிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஹேக்கத்தான், இரண்டு நாடுகளில் குழு அடிப்படையிலான சிக்கல் தீர்க்கும் முறையை பயன்படுத்தியது. பங்கேற்பாளர்கள், மறுவாழ்வு, குணமடைதலைக் கண்காணித்தல் மற்றும் உதவி சாதனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சுகாதாரத் தொழில்நுட்ப யோசனைகளில் பணியாற்றினர்.

இஸ்ரேலில் உள்ள இந்திய யூத சமூகத்தைச் சேர்ந்த ஓரி காட்வில், மற்ற சமூக உறுப்பினர்களுடன் இணைந்து இந்த ஹேக்கத்தானை ஏற்பாடு செய்தார்.

தாப்பர் பல்கலைக்கழகம் முதன்மை கல்வி பங்காளராக செயல்பட்டதுடன், ஆரம்பகட்ட புத்தாக்கம் மற்றும் சுகாதாரத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு மையமாகவும் விளங்கியது. மேலும் தாப்பர் பல்கலைக்கழகம் இந்நிகழ்ச்சிக்கான கல்விசார் கூட்டாளியாகச் செயல்பட்டது.

இஸ்ரேலுக்கான இந்தியத் தூதர் ஜே.பி. சிங், 2026 ஆகஸ்ட் 14 அன்று வெற்றியாளர்களைப் பாராட்டினார்.

இந்த நிகழ்வில் கால்களை இழந்தவர்களுக்கு மறுவாழ்விற்காக சக்கர நாற்காலியின் முன் சக்கரத்தின் இயந்திர சுழற்சியைப் பயன்படுத்தும், குறைந்த செலவிலான, மின்சாரமில்லாத , சக்கர நாற்காலி முன்மாதிரியை இஸ்ரேல் அறிமுகம் செய்தது.

இந்தியா சார்பில், காயமடைந்த நோயாளிகளின் கை, கால் அசைவுகளை ஆரோக்கியமான நபர்களின் அசைவுகளுடன் ஒப்பிடுவதற்கு, நிகழ்நேர காணொளி செயலாக்கம் மற்றும் தானியங்கி இயக்கப் பகுப்பாய்வு முன்மாதிரி அறிமுகம் செய்யப்பட்டது.

இஸ்ரேலில் வெற்றி பெற்ற தீர்வுகளில், சக்கர நாற்காலியின் முன்பக்கச் சக்கரம் இயற்கையாகச் சுழலும் தன்மையைப் பயன்படுத்தி, மின்சாரத் தேவையின்றி கால்களைக் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் அசைக்க உதவும் ஒரு அமைப்பும் அடங்கும்.

உறுப்பு அசைவு மற்றும் மறுவாழ்வு சிகிச்சைக்குத் துணையளிக்கும் வகையில், எளிமையான மற்றும் பரவலாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு அணுகுமுறையை இத்தீர்வு வழங்க முற்படுகிறது.

இந்திய தூதரகம்

இந்த முன்னெடுப்பு குறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், “இஸ்ரேலில் உள்ள இந்திய யூத சமூகத்தை சேர்ந்த ஓரி காட்வில், இந்த ஹேக்கத்தான் நிகழ்வை ஒரு முன்னெடுப்பாக நடத்த திட்டமிட்டார்.

இந்த முன்னெடுப்பு, இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மக்கள் உறவுகளை வலுப்படுத்தவும், பரந்த சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்வுகளுக்காக இளம் மாணவர்களின் படைப்பாற்றலையும் தொழில்நுட்பத் திறன்களையும் பயன்படுத்தவும் சமூகத்திற்கு ஒரு தளத்தை வழங்கியது.

சமூக ஈடுபாடு மற்றும் புத்தாக்கத்திற்கான ஒரு தளமாக உருவாக்கப்பட்ட முதல் இந்தியா-இஸ்ரேல் ஹேக்கத்தான், இந்தியா-இஸ்ரேல் நட்புறவு, இளைஞர்கள் தலைமையிலான புத்தாக்கம் மற்றும் சமூக நன்மைக்கான தொழில்நுட்பம் ஆகியவற்றின் அர்த்தமுள்ள கொண்டாட்டமாக உருவெடுத்தது.

இரு நாடுகளிலும் உள்ள இளைஞர்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, சமூக நலனுக்கும் உலகளாவிய நன்மைக்கும் பங்களிக்கக்கூடிய தீர்வுகளை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை இந்த முயற்சி நிரூபித்தது.

இந்தியத் தூதரகம் இதுபோன்ற முயற்சிகளை ஆதரிப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும், இந்தியா-இஸ்ரேல் ஹேக்கத்தானின் அடுத்த பதிப்பை எதிர்நோக்குகிறது” என்று தெரிவித்தது.