சர்வதேச பொது சுகாதாரத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான உலக சுகாதார நிறுவனம் (WHO), தனது 79வது உலக சுகாதார மாநாட்டை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடத்தியது.
அக்கூட்டத்தில் சமத்துவமான சுகாதாரப் பாதுகாப்பு, டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா மீண்டும் வலியுறுத்தினார்.
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் (ABDM) மற்றும் இ-சஞ்சீவனி தொலைநிலை ஆலோசனைத் தளம் போன்ற முன்னெடுப்புகள், உலக தென்பகுதி நாடுகளுக்கு அறநெறி சார்ந்த மற்றும் சமத்துவமான சுகாதார மாதிரிகளை வழங்கி, சுகாதார சேவைகளை அணுகுவதில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் மூலம் நோயாளிகள் தங்கள் மருத்துவ பதிவுகளை டிஜிட்டல் முறையில் எளிதாகப் பராமரிக்கவும், நிர்வகிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவதில் உலகையே வியக்கவைத்த Co-WIN தளம், தற்போது தேசிய தடுப்பூசி திட்டத்திற்காக UWIN ஆக மேம்படுத்தப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்தும் சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவுக்காக இந்தியா சமீபத்தில் அறிமுகப்படுத்திய வியூகம் பற்றியும், நட்டா விவரித்துள்ளார்.
அனைவருக்கும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக உலக நாடுகளின் கூட்டுப் பொறுப்பை ஒற்றுமை உணர்வுடன் இன்னும் உறுதியானதாக மாற்றுமாறு சர்வதேச சமூகத்தை நட்டா வலியுறுத்தினார்.