உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கும் என்றும், மற்ற அனைத்தையும் விட மனிதாபிமான விழுமியங்களுக்கே முன்னுரிமை அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
பிரான்ஸின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மோடி, ஜெலன்ஸ்கியை சந்தித்தார். சந்திப்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
அந்த பதிவில், "எவியனில் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்தேன். சமீப காலங்களில் இந்தியாவும் உக்ரைனும் பரவலான உறவை கொண்டுள்ளன. இது எங்கள் ஒத்துழைப்பின் பல்வேறு துறைகளில் பிரதிபலிக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "எங்கள் ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை மறுஆய்வு செய்வது குறித்தே இன்றைய பேச்சுவார்த்தை அமைந்திருந்தது. போருக்கு முந்தைய காலத்தில் இருந்த நிலைக்கு வர்த்தக உறவுகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் இருவரும் உடன்படுகிறோம்.
மேலும், இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கும் என்பதையும், மனிதாபிமான விழுமியங்களுக்கே முன்னுரிமை அளிக்கும் என்பதையும் மீண்டும் வலியுறுத்தினேன்," என்று அவர் கூறினார்.
ரஷ்யா-உக்ரைன் மோதலை பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.