இம்ரான் கான் உடல்நிலை குறித்து அவ்வப்போது வெளியாகும் தகவல்கள் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைச்சாலையில் கடுமையான உடல்நல பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும், உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் தான் உயிருடன் வெளியேற முடியாது என்ற அச்சம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சிறை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து பாகிஸ்தான் நீதிபதிகளுக்கு அவர் எழுதியுள்ள அவசரக் கடிதம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடியால சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான், தனது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகத் தெரிவித்து அந்நாட்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தனக்குத் தேவையான தகுந்த மருத்துவப் பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் பெறச் சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தனது உடல்நிலையைக் கூட கவனிக்காமல் சிறை நிர்வாகம் வேண்டுமென்றே ஆபத்தான சூழ்நிலைக்குத் தள்ளுவதாக அவர் அந்தக் கடிதத்தில் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரான இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீண்ட காலமாகச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது வெளியாகும் தகவல்கள் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய சூழலில் அவருக்கு உடனடியாகச் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவரது குடும்பத்தினரும் கட்சியினரும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னாள் பிரதமரான இம்ரான் கானுக்குச் சிறையில் உரிய பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படாதது மனித உரிமை மீறல் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவருக்கு இத்தகைய அவல நிலை ஏற்பட்டுள்ளது பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் சூழலின் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சிறையில் இம்ரான் கானின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடிக்கும் என்று அவரது கட்சி எச்சரித்துள்ளது.