அமெரிக்கா - ஈரான் இடையேயான தொடர் மோதலால், மத்திய கிழக்கில் பதற்றம் நிலவிவரும் நிலையில், சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மெக்காவில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஆகியோர் கூட்டாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்.
இதன்மூலம் மூன்று நாடுகளில் எந்த நாடுமீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அவை மூன்று நாடுகள்மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாக கருதப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரு நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில், மற்ற நாடுகள் தங்களின் கூட்டுப் பாதுகாப்பு பலத்தைப் பயன்படுத்தி அதற்குப் பதிலடி கொடுக்கவோ அல்லது உதவவோ முன்வரும்.
பாகிஸ்தான், இஸ்லாமிய நாடுகளில் அணுஆயுத வல்லமை கொண்ட ஒரே நாடு. துருக்கி நேட்டோ அமைப்பில் இரண்டாவது பெரிய ராணுவப் படையைக் கொண்ட மற்றும் மேம்பட்ட ட்ரோன் தொழில்நுட்பத்தைக் கொண்ட நாடு.
பலமான பொருளாதார நிதி ஆதாரங்கள் மற்றும் பிராந்திய செல்வாக்கைக் கொண்ட நாடு சவுதி அரேபியா.
இந்த ஒப்பந்தம் “முற்றிலும் தற்காப்பு நோக்கமுடையது” என்றும், இது எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையும் குறிவைக்கவில்லை என்றும், மற்ற பிராந்திய நாடுகளுக்கும் இது பொருந்தும் என்றும் ஒரு துருக்கி தெரிவிக்க, அனைத்தையும் உற்றுநோக்கி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது துருக்கியும் இணைந்து இது ஒரு முத்தரப்பு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.