உலகம்

ஒன்று வெடித்தால் வளைகுடாவில் நான்கு வெடிக்கும்.. டிரம்பின் எண்ணெய் உள்கட்டமைப்பு மிரட்டலுக்கு ஈரான் பதிலடி

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை ரஷியா சென்றடைந்தார்.

அணு ஆயுதம் தயாரிப்புக்கான யுரேனியம் செறிவூட்டலை கைவிடல் மற்றும் ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் ஆதிக்கத்தை கைவிடல் ஆகிய அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுப்பதால் போர் நிறுத்தம் எட்டுவதில் இழுபறி நீடித்து வருகிறது.

ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட முயற்சித்து வருவதால் பிராந்தியத்தில் பரபரப்பு நீடிக்கிறது

இந்நிலையில் ஒரு ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

Fox News செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த டிரம்ப், "ஈரானில் எண்ணெய் குழாய்கள் ஏதேனும் ஒரு காரணத்தால் மூடப்பட்டால் அந்த குழாய் வெடித்து விடும்.

எண்ணெய் குழாய்களில் இருந்து கொள்கலன்களிலோ அல்லது கப்பல்களிலோ நிரப்ப முடியாது.

வெடித்து சிதறினால் அதனை முன்பிருந்ததைபோல மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. இது மிகவும் சக்திவாய்ந்த விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் தலைமை என்னை அணுகலாம். அவர்கள் பேச விரும்பினால் எங்களை அழைக்கலாம்" என்று தெரிவித்தார்.

அதிபர் டிரம்ப் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் தரப்பிலிருந்து அதற்குப் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

ஈரானிய எரிசக்தி மேம்படுத்தல் மற்றும் மேலாண்மை அமைப்பின் தலைவரான இஸ்மாயில் சகப் எஸ்பஹானி தனது எக்ஸ் பதிவில்,

“இந்த முற்றுகையின் விளைவாக, எண்ணெய் கிணறுகள் உட்பட எங்களது உள்கட்டமைப்பிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவளிக்கும் நாடுகளின்(வளைகுடா நாடுகளில்) அதே போன்ற உள்கட்டமைப்பின் மீது, எங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை விட நான்கு மடங்கு சேதத்தை நாங்கள் ஏற்படுத்துவோம் என்று உறுதியளிக்கிறோம்.

எங்கள் கணிதம் வேறு: 1 எண்ணெய் கிணறு = 4 எண்ணெய் கிணறுகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் சென்றடைந்தார்.

அங்கு அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்துப் போர் நிறுத்தம் மற்றும் எண்ணெய் வர்த்தக சூழல் குறித்து ஆலோசிக்க உள்ளார்.