வர்த்தக கப்பல் போக்குவரத்துக்கு ஏதுவாக ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க இசைந்துள்ளதால் அமெரிக்கா, இஸ்ரேல் உடன் 2 வாரம் போர் நிறுத்தம் நேற்று ஏற்பட்டது.
நாளை(ஏப்ரல்10) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வைத்து இரு அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில், "ஒரு நிரந்தரமான மற்றும் உண்மையான ஒப்பந்தம் எட்டப்படும் வரை அமெரிக்க ராணுவம் ஈரானின் எல்லைகளிலிருந்து பின்வாங்காது.
துல்லியமாக தாக்குதல் நடத்த தேவையான ஆயுதங்கள், தளவாடங்களுடன் அமெரிக்கப் போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டிருப்பார்கள்.
போர் நிறுத்தத்தின் போது, ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறந்து வைப்பதாகவும், அணு ஆயுதங்களை உருவாக்கப் போவதில்லை என்றும் ஈரான் உறுதியளித்துள்ளது.
ஈரான் தனது வாக்குறுதிகளை மீறினால், உலகம் இதுவரை பார்த்திராத வகையில் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும்; துப்பாக்கிகள் தான் பேசும்.
இதற்கிடையில், நமது மாபெரும் ராணுவம் ஆயுதங்களில் தோட்டாக்களை மீண்டும் நிரப்பிக்கொண்டும் ஓய்வெடுத்துக்கொண்டும் இருக்கிறது; சொல்லப்போனால், அது தனது அடுத்த வெற்றியை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. அமெரிக்கா மீண்டும் களத்திற்கு வந்துவிட்டது!" என்று குறிப்பிட்டுளார்.
லெபனான் சூழல்
இதற்கிடையே ஈரானுடனான போர் நிறுத்தம் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பிற்குப் பொருந்தாது என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்துள்ளார். டிரம்ப்பும் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்க மாட்டோம் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதற்குப் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், உலகின் மிக முக்கியமான எரிசக்திப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.