உலகம்

'அவர் நலமாக இருந்தால் அதுவே போதும்': கணவரின் உயிரைக் காப்பாற்ற சிறுநீரகத்தை தானமாக அளித்த மனைவி

கணவரின் உயிர் பிரிந்துவிடுமோ என்ற அச்சத்தில், ரத்த உறவு இல்லாவிட்டாலும் மனைவி சிறுநீரக பரிசோதனை செய்ய முன்வந்தார்.

மருத்துவ அறிவியலின் படி, தம்பதியருக்குள் பொருத்தமான சிறுநீரகம் அமைவது 10 சதவீதத்திற்கும் குறைவான அரிதான நிகழ்வாகும்.

சீனாவைச் சேர்ந்த 25 வயதான லியாங் என்ற இளம் பெண், ரத்த உறவு இல்லாதவர்களுக்கு இடையே சிறுநீரகப் பொருத்தம் அமைவதற்கான வாய்ப்பு 10 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தபோதிலும், தனது கணவரின் உயிரைக் காப்பாற்றத் தனது ஒரு சிறுநீரகத்தைத் தானமாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். யூரேமியா என்ற கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தனது கணவரைக் காப்பாற்ற வேறு வழியின்றி அவர் இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்.

லியாங்கின் 33 வயதான கணவர் சுங், பிறவியிலேயே சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளாகக் கடுமையான யூரேமியா நோயால் அவதிப்பட்டு வந்தார். ஓ-நெகட்டிவ் வகை ரத்தப் பிரிவைக் கொண்ட அவருக்குப் பொருத்தமான சிறுநீரகம் கிடைப்பதில் கடும் தாமதம் ஏற்பட்டது. சிறுநீரக தானப் பட்டியலில் பெயர் பதிவு செய்து மூன்று ஆண்டுகள் காத்திருந்த நிலையிலும், பொருத்தமான தானமளிப்பவர் கிடைக்கவில்லை. மேலும் 2 முதல் 7 ஆண்டுகள் வரை காத்திருக்க நேரிடும் என்றும், ஆனால் சுங்கின் உடல்நிலை அந்த அளவிற்கு ஒத்துழைக்காது என்றும் மருத்துவர்கள் எச்சரித்தனர்.

கணவரின் உயிர் பிரிந்துவிடுமோ என்ற அச்சத்தில், ரத்த உறவு இல்லாவிட்டாலும் லியாங் தனது சிறுநீரகத்தைப் பரிசோதனை செய்ய முன்வந்தார். மருத்துவ அறிவியலின் படி, தம்பதியருக்குள் பொருத்தமான சிறுநீரகம் அமைவது 10 சதவீதத்திற்கும் குறைவான அரிதான நிகழ்வாகும். ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாகப் பரிசோதனையில் இருவரின் திசுக்களும் பொருந்திப்போயின. இதையடுத்து, குவாங்சோ மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது இணைப்பு மருத்துவமனையில் லியாங்கின் இடது சிறுநீரகம் சுங்கிற்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.

கணவர் நலமாக இருந்தால் அதுவே போதும்

சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு சுங் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். சிறுநீரகத் தானத்திற்குப் பிறகு தனக்கு ஏற்பட்ட வலி பிரசவ வலியை விட 10 மடங்கு அதிகமாக இருந்ததாகவும், இருப்பினும் தனது கணவர் உயிர் பிழைத்தது அளவற்ற மகிழ்ச்சி அளிப்பதாகவும் லியாங் தெரிவித்துள்ளார். சிறுவயதிலேயே பெற்றோரைப் பிரிந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த லியாங்கிற்கு, கணவர் மூலமே குடும்ப அன்பும் ஆதரவும் கிடைத்தது. அன்பிற்காக போராட்டங்களைக் கடந்து கணவரின் உயிரைக் காத்த இந்த மனைவியின் தியாகத்தை இணையவாசிகள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றன.

SCROLL FOR NEXT