அமெரிக்க அதிபர் டொனாட்ல் டிரம்ப் நெதர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
நெதர்லாந்தின் ஹாக் நகரில் கடந்த 2002-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், உலகளவில் நிகழும் குற்றங்களுக்கு சம்பந்தப்பட்ட தேசிய அரசாங்கங்கள் விசாரணை நடத்தாத சூழ்நிலையில், இந்த நீதிமன்றம் அதற்கான சர்வதேச தீர்ப்பாயமாக செயல்பட்டு வருகிறது.
இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது கடந்த 2024-ஆம் ஆண்டு, காசா போரில் தொடர்புடைய போர்க் குற்றச்சாட்டுகளுக்காக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோர்களுக்கு எதிராக கைது வாரண்டுகளை பிறப்பித்தது.
அதேபோன்று அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளரான மார்கோ ரூபியோ கடந்த 2022-ஆம் ஆண்டு, உக்ரைன் போரில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறி, ரஷிய அதிபர் புதின் மீதான விசாரணையை முன்மொழிந்தார்.
இதையடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமெரிக்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அமெரிக்க டாலர் பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்க உள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் குற்றவியல் நீதிமன்றத்தை உலகளாவிய வங்கி அமைப்பின் பெரும்பகுதியில் இருந்து துண்டிக்கக்கூடியதுமான தடை உத்தரவுக்கு டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு ஆறு முதல் ஏழு மாத கால அவகாசத்திற்கு பிறகு அமலுக்கு வரும் என்றும், தகவல் தொடர்பு சேவைகள் தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த வாரம் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தின்போதோ அல்லது அதனை தொடர்ந்த நாட்களிலோ, இந்த நடவடிக்கைகள் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளரான மார்கோ ரூபியோ கடந்த ஜூலை மாதத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினரல்லாத அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளை சேர்ந்த அதிகாரிகளை விசாரிப்பதன் மூலம், தனது அதிகார வரம்பை மீறிவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லாத போது, இஸ்ரேல் அதிபருக்கு எதிராக கைது வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர், தேவைப்பட்டால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை செங்கல் செங்கலாக கலைக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் எடுக்கும் எனவும் தெரிவித்தார்.