உலகம்

நான் 9 நாட்களாக ‘ஹரே கிருஷ்ணா’ என்று உச்சரித்து கொண்டிருந்தேன்: கிருஷ்ண ஜெயந்தியில் சுரங்கத்தில் மீட்கப்பட்ட தொழிலாளி

நேபாள வெள்ளத்தில் 9 நாட்களாக சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளியை மீட்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ள பேரிடரில் திரிசூலி 3A நீர்மின் திட்டத்தில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 30 வயதான தொழிலாளி மீட்கப்பட்டபோது, தான் கடந்த ஒன்பது நாட்களாக ‘ஹரே கிருஷ்ணா’ என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்ததாக கூறினார்.

நேபாளத்தில் ஆகஸ்ட் 26 அன்று நேபாள-திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட பனிப்பாறை சரிவினால், வடக்கு மற்றும் மத்திய நேபாள பகுதிகளில் உள்ள நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

சுரங்கத்தில் சிக்கிய ஊழியர்கள்

அப்போது திரிசூலி ஆற்றங்கரையில் உள்ள நீர்மின் திட்டங்களுடன் இணைக்கப்பட்ட சுரங்கங்களில் மின் ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

இந்த பேரிடரின் போது மின் மேற்பார்வை ஊழியரான சஞ்சய் சா, கட்டுப்பாட்டு அறையில் மற்ற ஊழியர்களுடன் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

அப்போது ஆற்றின் மேல்பகுதியில் ஏற்பட்ட பெருவள்ளம் குறித்த தகவல் கிடைத்ததும், அவருடன் பணியாற்றிய மற்ற தொழிலாளர்களை அங்கிருந்து தப்பி செல்லுமாறு ஷா கூறியுள்ளார்.

இதையடுத்து சுரங்கத்தில் இருந்து கடைசியாக தப்ப முயன்ற அவரால், பெருவெள்ள இடர்பாடுகளில் சிக்கி தப்பிக்க முடியாமல் போனது.

மின் ஊழியர்கள் மீட்பு

இதன் காரணமாக அவர் கடந்த ஒன்பது நாட்களாக சுரங்கப்பாதைக்குள் இருளில் சிக்கியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 9 நாட்களாக சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த சஞ்சய் ஷா மற்றும் 45 வயதான கபீர் மஹர்ஜன் ஆகிய மின் ஊழியர்களை நேபாள மீட்பு படை வீரர்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து மீட்கப்பட்ட மின் ஊழியர்களை மேல் சிகிச்சைக்காக செளனியில் உள்ள நேபாள ராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு சென்றனர்.

ஹரே கிருஷ்ணா மந்திரம்

இந்த நிலையில் சுரங்கப்பாதையில் மீட்கப்பட்ட மின் ஊழியரான சஞ்சய் ஷா கூறுகையில், “நான் கடந்த ஒன்பது நாட்களாக ஹரே கிருஷ்ணா என்ற மகா மந்திரத்தை உச்சரித்து வந்தேன்.

வெள்ளம் வந்தபோது நான் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். என்னுடன் பணிபுரிந்த அனைவரின் உயிரையும் காப்பாற்றுவது எனது பொறுப்பாக இருந்தது.

இந்த விபத்தில் மற்ற சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்களுடன் என்னால் தொடர்பு கொள்ள முடிந்தது.

ஆனால் சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த அனைவராலும் தப்பித்திருக்க முடியாது. ஏனென்றால் அந்த சுரங்கப்பாதை மிகவும் நீளமானது” என்று அவர் கூறினார்.

இதையடுத்து நேபாள ராணுவம் தலைமையிலான பாதுகாப்பு பிரிவு வீரர்கள், மீட்பு உபகரணங்களை பயன்படுத்தி சுரங்கத்தில் சிக்கி காணாமல் போன மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் திரிசூலி ஆற்றங்கரையில் உள்ள 6 நீர்மின் திட்டங்களுடன் இணைக்கப்பட்ட சுரங்கங்களில் குறைந்தது 900 பேர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT