டிரம்ப் 
உலகம்

"இது தற்பெருமை அல்ல; 8 போர்களை நிறுத்தியுள்ளேன்.." அமைதிக்கான நோபல் பரிசுக்கு மீண்டும் அடிபோடும் டிரம்ப்

இனி "முழுமையாக அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்க" வேண்டிய கட்டாயம் தனக்கு இல்லை

2026 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் நோபல் பரிசுக்கான தன் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் விரைவில் நடக்க இருக்கும் இடைக்கால தேர்தலுக்காக நாடு முழுவதும் பல இடங்களில் பிரசாரம் செய்துவிட்டு வாஷிங்டன் திரும்பிய டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

நோபல் பரிசு

அப்போது, "வேறு யாரும் செய்யாத காரியங்களை நான் செய்துள்ளேன். நான் தற்பெருமை பேசவில்லை, உண்மைகளைத்தான் கூறுகிறேன். நான் 8 போர்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளேன். வேறு எந்த அதிபரும் செய்யாத சாதனை இது" என தெரிவித்த அவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற தான் முற்றிலும் தகுதியானவர் என தெரிவித்தார்.

தனது அமைதி முயற்சிகள் இன்னும் முடியவில்லை என்பதை குறிக்கும் வகையில், தனது பட்டியலில் விரைவில் மற்றொரு மோதலும் இணையக்கூடும் என்றும் டிரம்ப் சூசகமாக தெரிவித்தார்.

முன்னதாக இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல்-ஈரான், கம்போடியா-தாய்லாந்து, செர்பியா-கொசோவோ, ருவாண்டா-காங்கோ ஜனநாயகக் குடியரசு, எகிப்து-எத்தியோப்பியா மற்றும் ஆர்மீனியா-அஜர்பைஜான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர்களை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா ஆற்றிய பங்கை அவர் பலமுறை சுட்டிக்காட்டியுயிருந்தார்.

ஆனால் அவர் குறிப்பிடும் மோதல்களில் பல அதிகாரப்பூர்வமான போர்கள் அல்ல என்றும், ஒவ்வொரு மோதலிலும் அமெரிக்காவின் பங்கு கணிசமாக வேறுபட்டிருந்தது என்றும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நிறைவேறா ஆசை

டிரம்ப் நோபல் பரிசு கோருவது இது ஒன்றும் புதிதல்ல. தனது முதல் பதவிக்காலத்தில், வட கொரியாவுடனான ராஜதந்திர முயற்சிகளுக்கு பிறகு அவரை நோபல் அமைதிப் பரிசுக்குப் பரிந்துரைத்ததாக நார்வே நாட்டைச் சேர்ந்த இரு அரசியல்வாதிகள் தெரிவித்தனர்.

ஓராண்டுக்குப் பிறகு, வட கொரியாவுடனான பதற்றத்தை தணிப்பதற்கான தனது முயற்சிகளுக்காக ஜப்பானின் அப்போதைய பிரதமர் ஷின்சோ அபே தன்னை அந்த விருதுக்கு பரிந்துரைத்ததாக டிரம்ப் கூறினார். எனினும், அபே அந்தப் பரிந்துரையை பகிரங்கமாக உறுதிப்படுத்தவில்லை.

2020 ஆம் ஆண்டிலும், தனது நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க 'ஆபிரகாம் ஒப்பந்தங்கள்' மூலமாக அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை சீராக்கியதற்காக தமக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.

அந்த கௌரவத்திற்குத் தான் தகுதியானவர் என்று வாதிட்ட அவர், 2009இல் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு எதுவுமே செய்யாமலே அந்த விருது வழங்கப்பட்டது குறித்து குறைபட்டுக் கொண்டார்.

நீங்கா ஏக்கம்

டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் இந்த விவகாரம் மீண்டும் வலுவாக எழுந்தது.

பிப்ரவரி 2025இல், வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகுவைச் சந்தித்தபோது, ​​தனக்கு அந்த விருது கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து டிரம்ப் வெளிப்படையாகக் குறைபட்டுக் கொண்டார்.

"அவர்கள் எனக்கு ஒருபோதும் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கமாட்டார்கள். அது வருத்தத்திற்குரியது. நான் அதற்குத் தகுதியானவன், ஆனால் அவர்கள் அதை எனக்கு ஒருபோதும் தரமாட்டார்கள். நான் அதை நான்கு அல்லது ஐந்து முறை பெற்றிருக்க வேண்டும்" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமைதிக்கான நோபல் பரிசு தனக்குக் கிடைத்ததா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், தான் மிகவும் அதிகமான பணிகளைச் செய்துள்ளதாகக் கூறிய டிரம்ப், தனக்கு அந்த விருதை மறுப்பது நோபல் குழுவிற்கு ஒரு பெரும் அவப்பெயராக அமையும் என்றும் தெரிவித்தார்.

2025 இல் ஏமாற்றம்

கிரீன்லாந்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான தனது முயற்சியால் நார்வேயுடன் மோதல் ஏற்பட்ட நிலையில், டிரம்ப் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரிடம் ஒரு செய்தியை அனுப்பினார்.

அதில், எட்டு போர்களை தடுத்த செயலுக்காக நார்வே தனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கவில்லை என்று அவர் குறை கூறினார்.

நார்வே தனக்கு அப்பரிசை வழங்காததால், இனி "முழுமையாக அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்க" வேண்டிய கட்டாயம் தனக்கு இல்லை என்று டிரம்ப் அதில் எழுதியிருந்தார்.

அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுபவரை நார்வே அரசாங்கம் தீர்மானிப்பதில்லை என்பதை ஸ்டோர் பின்னர் தெளிவுபடுத்தினார். சுதந்திரமாகச் செயல்படும் நார்வே நோபல் குழுவே இப்பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கிறது.

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ 2025ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.

வெனிசுலாவில் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்தியதற்காக அப்பரிசை வென்ற மச்சாடோ, பின்னர் வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்து தனது நோபல் பதக்கத்தை அவரிடம் வழங்கினார்,

ஆனால், மச்சாடோ தனது பதக்கத்தைத் தனிப்பட்ட முறையில் ட்ரம்ப்பிடம் வழங்க முடிந்தாலும், நோபல் பரிசை வேறொருவருக்கு மாற்றவோ, பகிர்ந்துகொள்ளவோ ​​அல்லது திரும்பப் பெறவோ முடியாது என்பதை நார்வே நோபல் குழு தெளிவுபடுத்தியுள்ளது.

2026 இல் பரிந்துரை

இஸ்ரேல், பாகிஸ்தான் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் 2026ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசுக்கு டிரம்பைப் பரிந்துரைத்துள்ளனர்.

ஆனால் நார்வே நோபல் குழு இந்த பரிந்துரைகளை பகிரங்கமாக உறுதிப்படுத்துவதில்லை. 2026ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு 208 தனிநபர்கள் மற்றும் 79 அமைப்புகள் உட்பட மொத்தம் 287 பேர் பரிசீலனையில் உள்ளதாகக் குழு தெரிவித்துள்ளது.

ஈரான் உடனான தற்போதைய ராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், 2026 நோபல் அமைதிப் பரிசு டிரம்பிற்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

SCROLL FOR NEXT