அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்து மீண்டும் மோதல் நடை பெற்று வந்த நிலையில், பேச்சுவார்த்தை நடப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதனால் ஈரான் மீதான திட்டமிட்ட மிகப்பெரிய தாக்குதலை நிறுத்தி வைத்ததாகவும் தெரிவித்தார்.
ஈரானுடனான பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்தது.
ஆனால் அதை ஈரான் திட்டவட்டமாக மறுத்தது. அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும் ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது தொடர்பாக ஓமனுடன் நடந்த பேச்சு வார்த்தையில் ஒப்பந்தம் மேற்கொள்வதில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளோம் என்றும் ஈரான் தெரிவித்தது.
ஓமனுடனான பேச்சு வார்த்தையில் அமெரிக்காவுக்கு எந்த பங்களிப்பும் இல்லை என்று ஈரான் தெரிவித்தது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், லாஸ் வேகாஸ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
"ஈரானை நாங்கள் கடுமையாக தாக்கி வருகிறோம். ஆனால் நான் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளவே விரும்புகிறேன். ஏனென்றால் நான் மக்களை கொல்ல விரும்பவில்லை. ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட, ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதையே விரும்புகிறேன்.
2-ம் உலகப் போருக்கு பிறகு மிகப்பெரிய தாக்கு தலை நடத்த நாங்கள் தயாராக இருந்தோம். அப்போது ஈரான் எங்களிடம் தயவுசெய்து அதைச் செய்யாதீர்கள். நாம் பேசலாம்’ என்று கூறியது. இதையடுத்து தாக்குதலை நிறுத்தி வைத்தேன்.
அதன்பிறகு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறோம். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பெறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்று டிரம்ப் கூறினார்.
இந்த நிலையில் ஈரானின் புரட்சிகர காவல் படையின் தலைமைத் தளபதி அஹ்மத் வஹிதி கூறுகையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வரை, ஈரானின் பாதுகாப்பிற்காக நாங்களும் அணு ஆயுதத் தயாரிப்புப் பணிகளைத் தொடர்வோம்.
அவர்கள் தங்கள் அணு ஆயுதங்களைக் கைவிட்டால், நாங்களும் அவ்வாறே செய்வோம் என்று வஹிதி கூறியுள்ளார்.
இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியில் ஓமன் அருகே சென்று கொண்டிருந்த ஒரு எண்ணை கப்பல் அருகே 2 வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக இங்கிலாந்து கடல்சார் நிறுவனம் தெரிவித்தது.
கப்பலும், அதன் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.