உலகம்

ஓமனில் ஐதராபாத் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: 15 மணி நேர கட்டாய வேலை, சம்பளமின்றி தவிப்பதாக கண்ணீர் வீடியோ!

மஸ்கட்டில் 50,000 சம்பளம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறிய போலி ஏஜெண்டுகள்.

மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாகக் கூறி ஓமனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஐதராபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்கு உண்ணுவதற்கு உணவின்றி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, பாஸ்போர்ட்டை இழந்து தவித்து வரும் அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

போலி ஏஜெண்டுகளின் ஆசை வார்த்தை

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பஹாடி ஷெரீப் பகுதியைச் சேர்ந்தவர் ஷப்னம் பேகம் (26). இவருக்கு உள்ளூர் ஏஜெண்ட் ஒருவர் ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் மாதத்திற்கு 200 ஓமனி ரியால் (இந்திய மதிப்பில் சுமார் ₹50,000) சம்பளத்தில் வீட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதனை நம்பி கடந்த மார்ச் 26ஆம் தேதி ஷப்னம் ஓமனுக்கு சென்றுள்ளார்.

நரகமாக மாறிய வாழ்க்கை

மஸ்கட் சென்றடைந்த பின்னரே ஏஜெண்டுகளின் சுயரூபம் தெரியவந்துள்ளது. ஷப்னம் அங்குள்ள வெவ்வேறு வீடுகளுக்கு அனுப்பப்பட்டு, தினமும் 12 முதல் 15 மணி நேரம் வரை ஓய்வின்றி கட்டாய வேலை வாங்கப்பட்டுள்ளனர்.

அவருக்குச் சரியான உணவோ, தங்குவதற்கு முறையான இடமோ வழங்கப்படவில்லை. தொடர்ந்து வேலை செய்ய மறுத்தபோது கடுமையாகத் தாக்கப்பட்டு, சித்திரவதை செய்துள்ளனர்.

வெளி உலகிற்குத் தகவல் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக ஒன்றரை மாதங்களாக அவரிடமிருந்து மொபைல் போன் பறித்து வைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கடந்த 4 மாதங்களாக அவருக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் தராமல் முதலாளிகள் ஏமாற்றியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

தூதரகத்தில் தஞ்சம்: உதவி கோரி கண்ணீர் வீடியோ

கொடுமைகளைத் தாங்க முடியாத ஷப்னம், ஒருவழியாக அங்கிருந்து தப்பித்து மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அடைந்துள்ளார். ஆனால், அவரது பாஸ்போர்ட் மற்றும் சில ஆவணங்களை ஏஜெண்டுகளின் வசம் இருப்பதால் ஷப்னம் இந்தியாவிற்கு திரும்ப முடியவில்லை.

இதனால் ஐதராபாத்தைச் சேர்ந்த மஜ்லில் பச்சாவ் தெஹ்ரீக் கட்சித் தலைவர் அம்ஜத் உல்லா கானுக்கு ஷப்னம் கண்ணீருடன் வீடியோ ஒன்றை அனுப்பித் தன்னை மீட்கும்படி உருக்கமாகக் கோரிக்கை வைத்துள்ளார்.

மத்திய அரசுக்குக் கோரிக்கை; இந்திய தூதரகம் நடவடிக்கை

இந்த விவகாரத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அம்ஜத் உல்லா கான், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு அவசரக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஷப்னமை பத்திரமாக ஐதராபாத்திற்கு மீட்டு வர நடவடிக்கை எடுக்குமாறும், ஏமாற்றிய போலி ஏஜெண்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம், "இந்த விவகாரம் எங்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது; உரிய அதிகாரிகளின் மூலம் அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்துள்ளது.