உலகம்

பனிச்சரிவில் சிக்கிய ஹஸ்கி நாய்க்குட்டி: 50 மணி நேரத்துக்கு பின் உயிருடன் மீட்ட மீட்புக்குழு

அலாஸ்கா மாகாணத்தில் லாரன் என்பவர் கடந்த 2023-ஆம் ஆண்டு லூலூ என்ற ஹஸ்கி நாய்க்குட்டியை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.

அமெரிக்காவில் மலையேற்றத்திற்கு சென்ற இரண்டு நபர்கள் தங்களுடன் அழைத்து சென்ற நாய்க்குட்டியை பனிச்சரிவில் தொலைத்த நிலையில், 20க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் தீவிரமான தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் லாரன் படாவர் என்பவர் கடந்த 2023-ஆம் ஆண்டு லூலூ என்ற பூடில்-ஹஸ்கி கலப்பான பெண் இனத்தை சேர்ந்த நாய்க்குட்டி ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.

இதையடுத்து லாரன், தனது தந்தையின் 80வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வெளிநாட்டிற்கு சென்றபோது, நாய்க்குட்டியை தனது காதலர் பொறுப்பில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.

நண்பருடன் சென்ற லாரன் காதலர்

அப்போது மலையேற்றத்தில் ஈடுபடுவதற்காக லூலூ நாய்க்குட்டியை அழைத்து கொண்டு, தனது நண்பருடன் லாரனின் காதலர் சென்றுள்ளார்.

அவர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென பனிச்சறுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு நபர்களும் 500 அடிக்கு கீழே அடித்து செல்லப்பட்டு, பின்னர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

மலையேற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் தங்களுடன் அழைத்து சென்ற ஹஸ்கி நாய்க்குட்டி பனிச்சறிவில் மாயமாகி காணாமல் போனது. இந்த சம்பவம் குறித்து நாயின் உரிமையாளருக்கு காதலர் தகவல் தெரிவித்துள்ளார்.

அப்போது தகவலறிந்து அதிர்ச்சியடைந்த லாரன், லூலூ நாய்க்குட்டியை கண்டுபிடிப்பதற்கான வழிகளை தேட தொடங்கினார்.

மீட்பு குழுவினர் தேடுதல் பணி

இதையடுத்து லாரன், அலாஸ்கா பனிச்சறுக்கு பகுதியில் உள்ள நான்கு மீட்புக்குழுக்கள், இரண்டு நடைபயண குழுக்கள், ஒரு பனிச்சரிவு குழு, ஒரு மலையேறும் குழு மற்றும் ஒரு பனிச்சறுக்கு குழு ஆகியோர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

மேலும் அவர் நாய்க்குட்டியை மீட்க 36க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினரின் உதவிகளையும் நாடியுள்ளார்.

லூலூ நாய்க்குட்டியின் தோல்கள் வெளிப்புறத்தில் கடினமானதாக இருந்ததால், அந்த நாய்க்குட்டியால் அதிக குளிரை சமாளிக்க முடியும் என லாரன் நம்பினார்.

செயற்கைக்கோள் உதவி

இதையடுத்து மீட்புக்குழுவினரருடன் மோப்ப நாய் உட்பட 20க்கும் மேற்பட்டோர் தரைவழி தேடுதலில் இணைந்தனர். இதற்கிடையில் செயற்கைக்கோள் செயலியின் உதவியுடன் நாய்க்குட்டியின் இருப்பிடத்தை மீட்புக் குழுவினர் கண்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து இரண்டு நாட்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட 50 மணி நேர தீவிர தேடுதலுக்கு பிறகு, லூலூ நாய்க்குட்டியை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டனர்.

நாய்க்குட்டியின் உரிமையாளர்

இந்த மீட்பு நடவடிக்கை குறித்து நாய்க்குட்டியின் உரிமையாளரான லாரன் கூறுகையில், “லூலூவின் கால்விரல் ஒன்றும், கோரைப்பல் ஒன்றும் உடைந்திருந்தது.

இருப்பினும் சிகிச்சைக்கு பிறகு லூலூவின் உடல்நிலை சீராக உள்ளது. மீட்புக் குழுவினர் நடத்திய தீவிர தேடுதல் பணி மற்றும் அவர்களின் மன உறுதியே லூலூவை மீட்பதற்கு காரணமாக அமைந்தது” என கூறினார்.

SCROLL FOR NEXT