சுமார் 66 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய பிரம்மாண்ட விண்கல் விபத்தில் சிக்கி, ஒட்டுமொத்த டைனோசர் இனமே அழிந்தபோது, சில பறவை இனங்கள் மட்டும் எப்படி உயிர் பிழைத்தன என்பது இன்றுவரை ஒரு பெரும் மர்மமாகவே நீடிக்கிறது.
அமெரிக்காவின் மொன்டானா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாசிலாக மாறிய விலங்கின் மலத்திற்குள் சிக்கியிருந்த சிறிய இறகுகள், இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க விஞ்ஞானிகளுக்கு ஒரு புதிய வழியைக் காட்டியுள்ளன.
பிரபல அறிவியல் இதழான 'கரண்ட் பயாலஜி'-ல் இந்த புதிய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
இந்த பாசில் கழிவானது, விண்கல் தாக்குதலுக்கு முன்பாக வாழ்ந்த 'டைரனோசரஸ் ரெக்ஸ்' அல்லது அதுபோன்ற மற்றொரு மாமிச உண்ணி டைனோசரால் வேட்டையாடி உண்ணப்பட்ட ஒரு சிறிய பறவையினுடையதாகும்.
டைனோசர் காலத்தைச் சேர்ந்த (மெசோசோயிக் யுகம்) பறவைகளின் இறகுகளில், இதுவரை கண்டெடுக்கப்பட்டதிலேயே மிக மிக நேர்த்தியாகப் பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள இறகு இதுவே ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாசில் மலத்திற்குள் இறகுகளுடன் சேர்த்து சில எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன.
அவை, தற்காலத்து 'லூன்' பறவைகளைப் போன்ற, நீரில் மூழ்கி நீந்தக்கூடிய, பறக்க முடியாத ஒரு சிறிய பறவையினுடையது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
'ஹெஸ்பெரோர்னிதிஃபார்ம்ஸ்' எனப்படும் இந்த இனம் அந்த விண்கல் விபத்தில் முழுமையாக அழிந்துவிட்டது.
டைனோசர் காலத்தில் வாழ்ந்த பல பறவை இனங்களில், 'நியோர்னிதிஸ்' என்ற ஒரே ஒரு நவீன பறவைக் குடும்பத்தின் வழித்தோன்றல்கள் மட்டுமே உயிர் பிழைத்து, இன்றைய பறவைகளாக மாறியுள்ளன.
இதற்கு முன்பு விஞ்ஞானிகள், 'நியோர்னிதிஸ்' பறவைகள் நீர்நிலைகளுக்கு அருகில் வாழ்ந்ததால் தப்பித்திருக்கலாம் என்று கூறினர்.
ஆனால், விண்கல் விபத்தில் அழிந்துபோன 'ஹெஸ்பெரோர்னிதிஃபார்ம்ஸ்' பறவைகளும் நீர்நிலைகளில் தான் வாழ்ந்தன. அப்படியிருக்க, ஒன்று மட்டும் பிழைத்து மற்றொன்று அழியக் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டு சீட்டில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளர் டேவிட் டிமார் ஜூனியர் என்பவரால் இந்த பாசில் மலம் கண்டெடுக்கப்பட்டது.
ஆராய்ச்சியாளர்கள் இதனை மைக்ரோ-சிடி ஸ்கேனர் மூலம் பரிசோதித்தபோது, அதற்குள் பறவையின் காலெலும்புகள் மற்றும் இறகுகள் இருப்பது தெரிந்தது.
மேலும், அந்த பறவை கடைசியாக சாப்பிட்ட 'கார்' என்ற மீனின் வைர வடிவ செதில்களும் அதில் இருந்தன.
சிகாகோவின் ஃபீல்டு மியூசியத்தின் தொல்பொருள் ஆய்வாளர் ஜிங்மாய் ஓ'கானர் இதுகுறித்துக் கூறினார்.
"இந்த பாசிலில் இருந்த சில இறகுகள் நவீன பறவைகளின் இறகுகளைப் போலவே தட்டையாக, இலகுவாகவும், அதே சமயம் உறுதியாகவும் இருந்தன.
ஆனால், வேறு சில இறகுகள் மிகவும் சிறியதாகவும், பஞ்சு போன்றும் இருந்தன. இவை உடலை வெப்பமாக வைத்திருக்க போதுமானதாக இருந்திருக்காது ."
விண்கல் மோதிய பிறகு பூமியின் வெப்பநிலை மிகக் கடுமையாகக் குளிர்ந்த போது, இந்த பழங்காலப் பறவைகளின் பலவீனமான இறகுகளே அவற்றின் அழிவுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று ஓ'கானர் நம்புகிறார்.
தப்பிப் பிழைத்த 'நியோர்னிதிஸ்' பறவைகளின் இறகுகள் தட்பவெப்ப நிலையைத் தாங்கும் அளவுக்கு மேம்பட்டதாக இருந்ததே அவை உயிர் பிழைக்கக் காரணம் என இந்த ஆய்வு கூறுகிறது.
எனினும், இந்த தியரியை முழுமையாக உறுதிப்படுத்த, விண்கல் தாக்குதலுக்குச் சற்று முந்தைய காலத்தைச் சேர்ந்த 'நியோர்னிதிஸ்' பறவையின் பாசில் இறகுகள் தேவை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அருங்காட்சியகங்களில் உள்ள மற்ற பாசில் மலங்களை ஆய்வு செய்வதன் மூலம் டைனோசர்கள் அழிவு குறித்த இன்னும் பல ரகசியங்களை அறிய முடியும் என நம்பப்படுகிறது.