உலகம்

உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 9 பேர் பலி- அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்

போர்க்களத்தில் வெற்றி பெற முடியாத ரஷியா தனது போரை உக்ரைனின் பொருளாதாரத்தை நோக்கி திருப்பி உள்ளது.

உக்ரைனில் உள்ள குடியிருப்பு பகுதிகள், துறை முகங்கள், உணவு கிடங்குகள் மற்றும் மின்உற்பத்தி நிலையங்களில் குறிவைத்து ரஷிய படைகள் கண்மூடி தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

உக்ரைன்-ரஷியா இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சண்டை நடந்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் போர் நீடித்து வருகிறது. ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. உக்ரைன் பொது மக்கள் உயிருக்கு பயந்து அகதிகள் முகாமில் தங்கி உள்ளனர்.

விடிய விடிய குண்டுமழை

இந்த நிலையில் உக்ரைனில் உள்ள குடியிருப்பு பகுதிகள், துறை முகங்கள், உணவு கிடங்குகள் மற்றும் மின்உற்பத்தி நிலையங்களில் குறிவைத்து ரஷிய படைகள் கண்மூடி தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. வான்வழி தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தி உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரஷியா 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலம் உக்ரைன் நகரங்கள் மீது கடும் தாக்குதலில் ஈடுபட்டது. விடிய விடிய குண்டுமழை பொழிந்த வண்ணம் இருந்தது. இந்த குண்டுவீச்சில் 9 பேர் பரிதாபமாக இறந்தனர். பச்சிளம் குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து குண்டு சத்தம் கேட்ட வண்ணம் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அதிபர் கண்டனம்

ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

போர்க்களத்தில் வெற்றி பெற முடியாத ரஷியா தனது போரை உக்ரைனின் பொருளாதாரத்தை நோக்கி திருப்பி உள்ளது. ரெயில்கள், தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய கிடங்குகளை அழித்து எங்கள் மக்களின் மன உறுதியை உடைக்கப்பார்க்கிறது. ரஷியாவின் இந்த பயங்கர தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கண்டனமும், பதிலடியும் தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

SCROLL FOR NEXT