ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஏமன் அரசாங்கம் ‘ஏமன் டான்’ என்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ள நிலையில், இந்த ராணுவ நடவடிக்கைக்கு சவுதி அரேபியா தனது முழு வான்வழி ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளது.
ஏமன் தலைநகரான சனாவை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி, தங்கள் வசம் வைத்திருக்கின்றனர்.
இதையடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாப்-அல்-மண்டேப் ஜலசந்தியை சுற்றியுள்ள முக்கிய நகரங்களான தைஸையும் கைப்பற்றியுள்ளனர்.
செப்டம்பர் மாதத்தில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனின் மேற்கு செங்கடல் கடற்கரையோரம் முக்கியத்துவம் வாய்ந்த மோக்கா நகரத்தையும், பல செங்கடல் தீவுகளையும் கைப்பற்றினர்.
இந்த முன்னேற்றங்கள் செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் குறுகிய கடல்வழி பாதையான பாப் அல்- மண்டேப் மீது ஏமன் மீதான கட்டுப்பாட்டை ஹவுதிகளுக்கு வழங்கின.
உலக வர்த்தகத்தில் சுமார் 12% இந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்வதால், இப்பகுதியின் மீதான கட்டுப்பாடு ஏமனுக்கு மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
மேலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெற்கு ஏமனில் அமைந்துள்ள முக்கிய நகரான துர்பா-வை நேற்று கைப்பற்றினர்.
துர்பா நகரானது, ஏமனின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான தைஸையும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் இடைக்கால தலைமையிடமாக செயல்படும் தெற்குத் துறைமுக நகரமான ஏடனையும் இணைக்கும் பிரதான சாலையாக அமைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் ஏமன் அரசாங்கம் தாங்கள் இழந்த சனா தலைநகரையும், ஜலசந்தியை சுற்றியுள்ள முக்கிய நகரங்களையும் கைப்பற்றும் நோக்கில் ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
இந்த ராணுவ நடவடிக்கையானது ‘ஏமன் டான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜனாதிபதி தலைமை மன்றத்தின் தலைவர் ரஷாத் அல்-அலிமி கூறுகையில், “இந்த நடவடிக்கையானது அரசு நிறுவனங்களை மீட்டெடுப்பதையும், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தலைநகர் சனாவை விடுவிக்கவும் உள்ளது.
மேலும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆட்சிக்கவிழ்ப்பை முடிவுக்கு கொண்டுவருவதையும் நோக்கமாக கொண்டுள்ளது” என கூறினார்.
இந்த நிலையில் ஏமன் அரசாங்கம் தொடங்கியுள்ள ராணுவ நடவடிக்கைக்கு, சவுதி அரேபியாவின் வான்வழி அமைப்பு தங்களின் ஆதரவை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சவுதியின் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மல்கி கூறுகையில்,“ஏமன் அரசாங்க படைகளுக்கு எங்கள் கூட்டணி முழுமையான ஆதரவை வழங்கி வருகிறது.
இந்த ராணுவ நடவடிக்கைக்கு சுமார் 100 போர் விமானங்கள் ஆதரவளித்து வருகின்றன. பாப்-அல்-மண்டேப் ஜலசந்தியின் மீதான கூட்டணி, வான் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹவுதிகள் முற்றிலுமாக அழிக்கப்படும் வரை ஏமன் அரசாங்க படைகளுக்கு கூட்டணி தொடர்ந்து ஆதரவளிக்கும்” என அல்-மல்கி கூறினார்.