சவுதி மீது ஹவுதி தாக்குதல்
உலகம்

சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி அறிவிப்பு

'கா'வா' முகாம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் இருந்த சவுதி படைகளை குறிவைத்து ஆறு ஏவுகணைகளை ஏவின.

ஏமனின் ஹவுதி ஆயுத படைகள், சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஒரு நிதி மையம் ஆகியவற்றின் மீது இரண்டு ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பேற்றுள்ளன.

டெலிகிராம் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஹவுதி அமைப்பின் ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சரீ கூறுகையில், "எங்கள் ஆயுதப் படைகள், சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தையும், அங்குள்ள நிதி மையத்தையும் இரண்டு ஏவுகணைகளை கொண்டு வெற்றிகரமாக தாக்கியுள்ளன. இறைவனின் அருளால், இந்த நடவடிக்கை தனது இலக்கை அடைந்தது" என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து சவூதி அரேபிய தரப்பில் இருந்து உடனடி பதில் ஏதும் வரவில்லை. முன்னதாக, லஹ்ஜ் மாகாணத்தில் உள்ள 'கா'வா' (Qa'wa) முகாம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சவூதி படைகளை குறிவைத்து, தங்கள் படைகள் ஆறு ஏவுகணைகளை ஏவியதாக ஹவுதி ராணுவ பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

ஏவுகணை தாக்குதல்:

சரீயின் கூற்றுப்படி, சவுதி அதிகாரி பத்ர் அல்-ஹர்பியின் கட்டளையின் கீழ் செயல்பட்ட சவுதி படைகளே இந்த தாக்குதலுக்கு உள்ளாகின. இந்த தாக்குதல்கள் நேரடியாக இலக்கை தாக்கியதாகவும், இதில் டஜன் கணக்கானோர் உயிரிழந்தனர் அல்லது காயமடைந்தனர் என்றும், ஏராளமான வாகனங்கள் அழிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

அந்த அறிக்கையில், "எங்கள் ஆயுத படைகள், சவுதி அதிகாரி பத்ர் அல்-ஹர்பியின் தலைமையின் கீழ் லஹ்ஜ் மாகாணத்தில் உள்ள 'கா'வா' முகாம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் இருந்த சவுதி படைகளை குறிவைத்து ஆறு ஏவுகணைகளை ஏவின. இறைவனின் அருளால், இந்த தாக்குதல்கள் நேரடியாக இலக்கை தாக்கின; இதன் விளைவாக டஜன் கணக்கானோர் உயிரிழந்தனர் அல்லது காயமடைந்தனர், மேலும் பல வாகனங்கள் அழிக்கப்பட்டன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் உயிரிழப்பு:

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் சவூதி போர் விமானங்கள் சாடா, தைஸ், லஹ்ஜ், அல்-ஜவ்ஃப் மற்றும் மரிப் ஆகிய மாகாணங்களில் உள்ள பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் 75 வான்வழி தாக்குதல்களையும் ஏவுகணை தாக்குதல்களையும் நடத்தியதாக ஹவுதி ராணுவ பேச்சாளர் குற்றம் சாட்டினார்.

காமிஸ் முஷைத் மற்றும் தாயிஃப் விமான தளங்களில் இருந்து புறப்பட்ட எஃப்-15 மற்றும் டைபூன் ரக போர் விமானங்கள் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், நஜ்ரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

SCROLL FOR NEXT