உலகம்

சவுதி மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ஹவுதிகள் - இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்ணை வழங்கிய தூதரகம்

சவுதியில் உள்ள அப்ஹா சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

சவுதி அரேபியாவில் முக்கிய போக்குவரத்து தளங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சவுதியில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், நிலைமை மோசமடையும் பட்சத்தில் அவசரகால சேவை எண்ணை தொடர்பு கொள்ளும்படியும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

தீவிரமடையும் தாக்குதல்

ஏமனில் உள்ள முக்கிய போக்குவரத்து தளமான பாப்-அல்-மண்டேப் ஜலசந்தியை கைப்பற்றும் நோக்கில் ஹவுதிகள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

ஏமன் அரசாங்கத்திற்கு ஆதரவாக சவுதி அரேபியா வான்வழி அமைப்புகள் மூலம் போரில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏமனுக்கு ஆதரவாக தாக்குதலில் ஈடுபட்டு வரும் சவுதியின் விமான நிலையங்கள் மீதும், முக்கிய நகரங்களின் மீதும் ஹவுதிகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சவுதி மீதான தாக்குதல் சம்பவம் குறித்து அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், ”அப்ஹா சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீதான தாக்குதலிலும், ஒருவர் கொல்லப்பட்டார்.

மேலும் ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் குடிமக்கள் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று கூறினார்.

இந்திய தூதரகம் எச்சரிக்கை

சவுதியின் முக்கிய நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் சூழலில், அங்கு வசிக்கும் இந்திய குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

தேவைக்கேற்ப வீட்டிலேயே இருக்க வேண்டும்; உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

சவுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வுகள் தொடர்பான காணொளிகள் மற்றும் செய்திகளை பரப்புவதையோ அல்லது மறுபதிவு செய்வதையோ இந்திய குடிமக்கள் தவிர்க்க வேண்டும்.

ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம், ஜித்தாவில் உள்ள துணைத் தூதரகம் மற்றும் VFS மூலமான அதன் சேவைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

24x7 அவசர உதவி எண்

இந்திய குடிமக்கள் 24 மணி நேரமும் செயல்படும் ‘பிரவாசி பாரதிய சஹாயதா கேந்திராவின்’ 8002471234 என்ற அவசரகால கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்; அது தொடர்ந்து செயல்படும்.

இந்தியர்கள் சமீபத்திய தகவல்களுக்கு, தூதரகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களைப் பின்தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை பாதிப்பு

இதையடுத்து சவுதியில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு சூழல், இந்தியாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையேயான விமான சேவைகளையும் பாதித்துள்ளது.

ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் ரியாத்துக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமான சேவைகளை அக்டோபர் 10 வரை ரத்து செய்துள்ளன.

அதே வேளையில், அகாசா ஏர் நிறுவனம் வியாழக்கிழமையன்று தனது கொச்சி-ரியாத் மற்றும் ரியாத்-கொச்சி சேவைகளை ரத்து செய்தது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இலவசமாக மாற்று பயண ஏற்பாடு அல்லது முழு பணமும் திருப்பித் தரப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா தனது ரியாத் சேவைகளையும் அக்டோபர் 10 வரை ரத்து செய்துள்ளது.

டெல்லியிலிருந்து ரியாத் சென்றுவந்த A12243 விமானம் வியாழக்கிழமையன்று தேசிய தலைநகருக்கே திரும்பியதாகவும், அதைத் தொடர்ந்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும், பயணிகளுக்கு முழு பணமும் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT