உலகம்

VIDEO: ஏமன் அதிபர் மாளிகை மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்.. 5 பேர் பலி - உயிர் தப்பிய பிரதமர்

பிரதமர் அல் ஜிந்தானி இந்தத் தாக்குதலை ஒரு "கோழைத்தனமான செயல்" என்று வர்ணித்தார்.

ஏமன் அதிபர் மாளிகை மீது ஹவுதிக்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். பிரதமர் உயிர் தப்பினார்

ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் தலைநகர் சனா உள்ளிட்ட பகுதிகளை 2015 முதல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசு ஏடனை இடைக்கால தலைநகராக கொண்டு செயல்பட்டு வருகிறது.

தாக்குதல்

ஹவுதிக்களுக்கும், ஏமன் அரச படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. ஏமன் அரசுக்கு ஆதரவளிக்கும் சவுதி அரேபியா மீதும் ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் ஏமன் அரசு செயல்பட்டு வரும் ஏடன் நகரில் உள்ள அல்-மஷிக் அதிபர் மாளிகை மீது நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உயிரிழப்பு

இந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்கல் நடந்த சமயம் அங்கிருந்த ஏமன் பிரதமர் ஷேக் அல் ஜிந்தானி மற்றும் பிற அரசாங்க அதிகாரிகள் இந்தத் தாக்குதலில் இருந்து காயமின்றி தப்பினர்.

இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில், கட்டிடத்தைப் பாதுகாக்கும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொது ஊழியர்களும் அடங்குவதாக யேமன் சுகாதார அமைச்சர் காசிம் புஹைபே கூறினார்.

இறந்தவர்களில் பிரதமரின் இரண்டு மெய்க்காப்பாளர்களும் அடங்குவர்.

இந்தத் தாக்குதல் மொத்தம் 5 பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு நடத்தப்பட்டதாக யேமனின் தகவல் அமைச்சர் தெரிவித்தார்.

தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், அடர்த்தியான புகை காணப்பட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

ஹவுதிக்கள் பொறுப்பேற்பு

இந்தத் தாக்குதலுக்கு ஹவுதிக்கள் பொறுப்பேற்றனர். அதிபர் மாளிகை வளாகத்தில் உள்ள சவுதி ராணுவ செயல்பாட்டு அறையை குறிவைத்ததாகவும், ஏமன் பிரதேசத்தில் உள்ள எந்தவொரு சவுதி ராணுவ தளமும் இலக்கு வைக்கப்படும் என்றும் ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி எச்சரித்துள்ளார்.

பிரதமர் பதில்

இதற்கிடையில், பிரதமர் அல் ஜிந்தானி இந்தத் தாக்குதலை ஒரு "கோழைத்தனமான செயல்" என்று வர்ணித்தார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான ஒரு பயங்கரவாத சதி என்றும் அவர் இதை குறிப்பிட்டார். ஹவுதிகளிடமிருந்து யேமன் பிரதேசம் முழுமையாக விடுவிக்கப்படும் வரைராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT