சவுதி அராம்கோ எரிவாயு நிலையம் மீது ஹூதி ஏவுகணை-ட்ரோன் தாக்குதல் 
உலகம்

சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எரிவாயு நிலையம் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி

சவூதி அரேபியாவின் அமைந்துள்ள எரிவாயு நிலையத்தை ஹூதிகள் தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சவுதி அரேபியாவின் ஜுபைல் பகுதியில் உள்ள எரிவாயு நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, ஹவுதி அமைப்பினரே காரணம் என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், இந்த தாக்குதல் சம்பவத்திற்கும், ஹவுதிக்கும் தொடர்பு இருப்பதாக சவுதி அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

சவுதி அரேபியா மீது தாக்குதல்

சவுதி அரேபியாவின் செங்கடல் கடற்கரையில், ஏமனுக்கு அருகில் அமைந்துள்ள ஜஸான் நகரம், ஒரு பெரிய அராம்கோ சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருள் வளாகத்தைக் கொண்டிருப்பதுடன், அந்நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகவும் திகழ்கிறது.

சவுதி அரேபியாவின் அல் ஜுபைலில் அமைந்துள்ள சவுதி அராம்கோ எரிவாயு நிலையத்தை ஹவுதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சவுதி அராம்கோ நிறுவனத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சவுதி எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், “சவுதி அராம்கோவுடன் இணைந்த தொழில்துறை பாதுகாப்பு தீயணைப்புக் குழுக்கள், ஜஸானில் உள்ள சவுதி அரம்கோ சுத்திகரிப்பு நிலையத்திற்குச் சொந்தமான ஒரு வளாகத்தில், இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தை அணைத்தனர்.

சம்பவம் தொடர்பாக உயரிய அதிகாரிகள் தேவையான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

ஹூதி ராணுவ செய்தி தொடர்பாளர்

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ கூறுகையில், “தங்கள் குழு ஜசானில் உள்ள அராம்கோ நிறுவனங்களை பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலமாகவும், யான்புவில் உள்ள நிறுவனங்களை பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலமாகவும் குறிவைத்து தாக்கியது” என்று தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஆசியா முழுவதும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் “மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்” கையெழுத்திட்ட சில நாட்களுக்குப் பிறகு, சவுதி எரிசக்தி உள்கட்டமைப்பு மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.