வியட்நாமின் தலைநகரில் உள்ள ஒரு ஹாட் பாட் உணவகத்தில் இன்று காலை ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஹனோய் நகரின் மக்கள் நெருக்கடி மிகுந்த குடியிருப்புப் பகுதியான டோங் டா தெருவில் உள்ள உணவகத்தில் காலை சுமார் 8:00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சமையல் எரிவாயு கசிவே இந்தப் பயங்கர வெடிவிபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெடிவிபத்தின் தாக்கத்தால் உணவகம் இருந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேலும், சுமார் 15 மீட்டர் சுற்றளவில் இருந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்து, சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.
இதனால், பாதுகாப்பற்றதாகக் கருதப்பட்ட கட்டிடங்களில் இருந்த குடியிருப்பாளர்களையும் அதிகாரிகள் வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளனர்.
விபத்து நடந்தபோது உணவகத்தில் வாடிக்கையாளர்கள் அதிகம் இருந்ததால், கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில், நவீன கருவிகள் மற்றும் ஹைட்ராலிக் இயந்திரங்களைக் கொண்டு காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.